சுடச்சுட

  

  கடலூர் மக்களவைத் தொகுதிக்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை அமைதியாக முடிந்தது.
  மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் 10-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. அரசியல் கட்சியினர் தேர்தலுக்கான பணிகளில் தீவிரம் காட்டினர். கடலூர் மக்களவைத் தொகுதியில் 21 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 
  இவர்களில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக வேட்பாளர் இரா.கோவிந்தசாமிக்கும், திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. எனினும், அமமுக வேட்பாளர் காசி.தங்கவேல், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வி.அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ர.சித்ரா உள்ளிட்டோரும் மற்றவர்களுக்குப் போட்டியாக களத்தில் உள்ளனர்.
  வாக்குப் பதிவு வியாழக்கிழமை (ஏப். 18) நடைபெற உள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவுபெற்றது. 
  நிறைவு பிரசார பரப்புரையை அனைத்து அரசியல் கட்சியினரும் தங்களது செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் நடத்தி முடிக்க திட்டமிட்டனர். இதில், பிரசார நிறைவிடம் தொடர்பாக அதிமுக, அமமுகவினர் இடையே திங்கள்கிழமை மோதல் போக்கு ஏற்பட்டது. 
  பாமக, திமுக, அமமுக ஆகிய 3 கட்சிகளும் தங்களது பரப்புரையை நிறைவு செய்யும் இடமாக திருப்பாதிரிபுலியூரை தேர்வு செய்ததால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவியது. எனினும், காவல் துறையினரின் சிறப்பான ஏற்பாட்டால் பிரசாரம் அமைதியாக நிறைவடைந்
  தது. 
  திட்டக்குடியில் தங்களது இறுதிக்கட்ட பரப்புரையை தொடங்கிய அதிமுக கூட்டணியினர் விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட பகுதிகள் வழியாக மோட்டார் சைக்கிள், கார்களில் அணிவகுத்து வந்து, திருப்பாதிரிபுலியூர் சன்னதி தெருவில் பாடலீஸ்வரர் கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடையில் பிரசாரத்தை நிறைவு செய்தனர்.
  திமுகவினர் கடலூர் மஞ்சக்குப்பத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் பேரணியாக முக்கிய வீதிகள் வழியாகச் சென்று திருப்பாதிரிபுலியூரில் லாரன்ஸ் சாலை சந்திப்பு பகுதியில் தங்களது பிரசாரத்தை நிறைவு செய்தனர். அமமுகவினர் நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் தாங்கள் ஏற்கெனவே அனுமதி பெற்றிருந்த திருப்பாதிரிபுலியூர் சன்னதி தெருவிலேயே பிரசாரத்தை நிறைவு செய்தனர்.
  ஒவ்வொருவரும் தனித் தனியாக பிரசாரத்தை செய்யும் வகையில் காவல் துறை  சார்பில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததோடு, ஒருவர் மற்றவரது கூட்டத்துக்குள் புகுந்துவிடாத வகையிலும் தீவிர கண்காணிப்பு செய்யப்பட்டது. 
  இதனால், அமைதியான முறையில் மக்களவைத் தேர்தல் பிரசாரம் நிறைவுபெற்றது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai