ராகுல் பிரதமராக திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும்: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
By DIN | Published On : 17th April 2019 06:41 AM | Last Updated : 17th April 2019 06:41 AM | அ+அ அ- |

ராகுல் காந்தி பிரதமராக திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும். இதற்காக கட்சித் தொண்டர்கள் பாடுபட வேண்டும் என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டார்.
திமுக கூட்டணி சார்பில் கடலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர்.வி.எஸ்.
ரமேஷ் செவ்வாய்க்கிழமை மாலை கடலூர் திருப்பாதிரிபுலியூரில் தனது தேர்தல் பரப்புரையை கூட்டணிக் கட்சியினருடன் நிறைவு செய்தார். அப்போது, அவரை ஆதரித்து திமுக மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது: திமுக கூட்டணி கொள்கைக்காக அமைத்துள்ளது. கட்சியினர் இறுதிக் கட்டத்தில் தங்களது உற்சாகத்தை இழக்காமல் பணியாற்ற வேண்டும். வெற்றிக்காக பாடுபட வேண்டும். தேர்தல் அறிவித்த உடனேயே மத்திய அரசு வருமான வரித் துறை மூலமாக எதிர்க் கட்சியினரிடம் சோதனை நடத்தி வருகிறது. தமிழக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி மனு அளித்த பாமக, எந்த அடிப்படையில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது?
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைப் பிரதமராக அறிவித்தவர் மு.க.ஸ்டாலின். எனவே, ராகுல் பிரதமராக வேண்டுமெனில் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும். கடலூர் நகரில் புதை சாக்கடை திட்டம் நிறைவடையாமல் உள்ளது. கொசு தொல்லை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காண திமுக வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்றார் அவர்.
திமுக தேர்தல் பணிக்குழு செயலர் இள.புகழேந்தி, சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் கோ.ஐயப்பன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஏ.எஸ்.சந்திரசேகரன், நிர்வாகி ரமேஷ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொகுதி செயலர் பா.தாமரைச்செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி வி.குளோப், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட செயலர் த.ஆனந்த் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...