கரூர் ஆட்சியரை இடமாற்றம் செய்ய வேண்டும் : கே.எஸ்.அழகிரிஹ

தனது பொறுப்பை உணர்ந்து செயல்படாத, கரூர் மாவட்ட ஆட்சியரை தேர்தல் ஆணையம் உடனடியாக வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தினார்.

தனது பொறுப்பை உணர்ந்து செயல்படாத, கரூர் மாவட்ட ஆட்சியரை தேர்தல் ஆணையம் உடனடியாக வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தினார்.
இதுகுறித்து அவர் சிதம்பரத்தில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தேர்தல் நடத்தப்படுமா என சந்தேகிக்கும் அளவுக்கு மாநிலத் தேர்தல் ஆணையம், காவல் துறை, வருவாய்த் துறையினரின் சார்பு நிலை நடவடிக்கைகள் அமைந்துள்ளன. இதுகுறித்து புதன்கிழமை மதியம் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை தொடர்பு கொண்டு கூறினேன். அப்போது, ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை சிதைந்து விடுமோ என்ற எனது அச்சத்தை வெளிப்படுத்தினேன்.
கரூரில் நாஞ்சில் சம்பத் பேசிக்கொண்டிருந்த வேன், காவல் துறையினரின் கண் முன்பே அதிமுகவினரால் அடித்து நொறுக்கப்பட்டது. அந்த பிரசாரக் கூட்டத்துக்கு காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி ஆன்லைனில் பதிவு செய்து அனுமதி பெற்றுள்ளார். ஆனால், அதே இடத்துக்கு ஆளுங்கட்சி அமைச்சருக்கு பிரசாரக் கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்துள்ளார். 
இதுகுறித்து வேட்பாளருக்கும், ஆட்சியருக்கும் தொலைபேசியில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆனால், மாவட்ட ஆட்சியரோ, தன்னை வேட்பாளர் மிரட்டுவதாக புகார் கொடுத்துள்ளார். ஒரு பெண் வேட்பாளர் எவ்வாறு ஆட்சியரை மிரட்ட முடியும்? பொறுப்பை உணராமல், பிரச்னையை தூண்டும் வகையில் செயல்படும் கரூர் மாவட்ட ஆட்சியரை தேர்தல் ஆணையம் உடனடியாக வேறு இடத்துக்கு மாற்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இதேபோல, தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியுள்ள வீட்டில் வருமானவரித் துறை சோதனை நடத்தியுள்ளது. அவரை மிரட்டுவதற்காக, அவர் மீது மக்களிடம் தவறான எண்ணத்தை ஏற்படுத்துவதற்காக அந்த சோதனையை நடத்தப்பட்டுள்ளது.  எந்தத் தொகுதியில் ஆளும் கட்சியினரின் பணம் புழக்கம் இல்லை? தேனி மக்களவைத் தொகுதியில் வாக்குக்கு பணம் தாராளமாக விநியோகிக்கப்படுகிறது. ஆனால், தேனியில் தேர்தல் நடத்தப்படுகிறது. வேலூரைத் தொடர்ந்து  தூத்துக்குடி, கரூர் ஆகிய தொகுதிகளிலும் தேர்தலை நிறுத்த முயற்சிகள் நடைபெறுகின்றன. சேலத்தில் கற்பனைக்கு எட்டாத அளவு பணம் செலவு செய்யப்படுகிறது. இவையெல்லாம் தேர்தல் ஆணையத்துக்கு தெரியாதா?  
எதிர்க்கட்சிகளை அடிபணிய வைக்கவும், ஜனநாயகத்தை அழிக்கும் வகையிலும் ஆளும் கட்சிகளான பாஜக, அதிமுக செயல்படுவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. வருங்காலம் அக் கட்சிகளுக்கு உரிய தண்டனையை வழங்கும் என்றார் கே.எஸ்.அழகிரி.
பேட்டியின் போது மாநில பொதுக்குழு உறுப்பினர் பி.பி.கே.சித்தார்த்தன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கே.ஐ.மணிரத்தினம், மூத்த நிர்வாகி தவிர்த்தாம்பட்டு விஸ்வநாதன், நிர்வாகிகள் சேரன், செந்தமிழ்ச்செல்வன், வெங்கடேசன், நகரத் தலைவர் பழனி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com