கலவரத்தை ஏற்படுத்த சதி: பாமக புகார்
By DIN | Published On : 21st April 2019 12:54 AM | Last Updated : 21st April 2019 12:54 AM | அ+அ அ- |

கடலூர் மாவட்டத்தில் கலவரத்தை ஏற்படுத்த நடைபெறும் முயற்சியை முறியடிக்க வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாமகவினர் சனிக்கிழமை புகார் அளித்தனர்.
இதுகுறித்து அந்தக் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலர் பழ.தாமரைக்கண்ணன் சனிக்கிழமை கடலூரில் மாவட்ட எஸ்பி ப.சரவணனை சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: கடலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாமக போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் பா.ம.க.வுக்கு வாக்களித்த குறிப்பிட்ட சமூகத்தினரை சில அரசியல் கட்சியினர் மிரட்டி வருகின்றனர். பாமகவுக்கு ஆதரவாக வரையப்பட்ட சுவர் விளம்பரங்களை அழிப்பது, சாதிக் கலவரத்தை தூண்டுதல், பொதுமக்களை தாக்குதல் ஆகியவற்றை சிலர் திட்டமிட்டுள்ளனர். இதனால், மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக, கிளிமங்கலம், செம்பேரி, செளந்திரசோழபுரம், ஆலப்பாக்கம், எய்தனூர், குச்சிபாளையம், ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சிகள் நடைபெறுவதால் இந்தப் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
பாமக மாவட்ட செயலர்கள் சண்.முத்துகிருஷ்ணன்,
க.சுரேஷ், சமட்டிகுப்பம் ஆறுமுகம், மாநில இளைஞரணி துணைத் தலைவர் இள.விஜயவர்மன், மாநில வழக்குரைஞர் பிரிவு தமிழரசன், மாணவரணி துணைத் தலைவர் விநாயகம், நகரத் தலைவர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.