விருத்தாசலம் அரசுக் கல்லூரியில் நாளை முதல் விண்ணப்பம் விநியோகம்

விருத்தாசலம் அரசுக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் திங்கள்கிழமை (ஏப்.22) முதல் விநியோகம் செய்யப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விருத்தாசலம் அரசுக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் திங்கள்கிழமை (ஏப்.22) முதல் விநியோகம் செய்யப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியான நிலையில் மாணவ, மாணவிகள் உயர் கல்விக்கான சேர்க்கை தொடர்பாக ஆலோசனை செய்து வருகின்றனர். இந்த நிலையில், கலை, அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு நிகழாண்டிலும் கூடுதலாக சேர்க்கை நடைபெறும் என கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில்,  விருத்தாசலம் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஏப்.22-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் விநியோகம் செய்யப்படுமென கல்லூரி முதல்வர் க.வேலு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
 கல்லூரியில் அறிவியல் பிரிவில் கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், தாவரவியல், வேதியியல், விலங்கியல் ஆகிய பாடப் பிரிவுகளும், கலைப் பிரிவில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், வணிகவியல், வணிக நிர்வாகவியல் ஆகிய பிரிவுகளிலும் சேர்க்கை நடைபெறுகிறது. நிகழாண்டில் ஆயிரம் மாணவ, மாணவிகள் சேர்க்கப்படுகின்றனர். 
இதற்கான விண்ணப்பங்களை கல்லூரி வளாகத்தில் காலை 10.30 மணி முதல் மாலை 3 மணி வரை ரூ.50 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். எஸ்சி, எஸ்டி பிரிவு மாணவ, மாணவிகள் சாதிச்சான்று அளித்து விண்ணப்பத்தை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்கள் மே மாதம் 6-ஆம் தேதி வரையில் வழங்கப்படும். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஒற்றைச் சாளர அடிப்படையில் வருகிற 
மே 15-ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும். எனவே, மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடலூர் அரசுக் கல்லூரியில் விண்ணப்பம் விநியோகம் 
எப்போது?: கடலூர் தேவனாம்பட்டினத்தில் செயல்பட்டு வரும் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் காலை சுழற்சியில் 17 பிரிவுகளிலும், மாலை சுழற்சியில் 6 பிரிவுகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும். தற்போது 
இந்தக் கல்லூரியில் மக்களவைத் தேர்தலில் பயன்படுத்திய வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில்,  கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் விநியோகம் எப்போது, எங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்படவில்லை. மாவட்டத்திலேயே அதிக இடங்களை நிரப்பும் கல்லூரியில் இதுவரை முறையான அறிவிப்பு ஏதும் வெளியாகாதது மாணவர்கள், பெற்றோர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே, இதுதொடர்பாக விரைந்து அறிவிப்பு வெளியிட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com