திரெளபதி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
By DIN | Published On : 23rd April 2019 10:00 AM | Last Updated : 23rd April 2019 10:00 AM | அ+அ அ- |

கடலூர் பழைய வண்டிப்பாளையம் திரெளபதி அம்மன் கோயிலில் திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கடலூர் பழைய வண்டிப்பாளையத்தில் விநாயகர், திரெளபதியம்மன், வீரமாகாளி, கிருஷ்ணர், ஆஞ்சநேயர் ஆகியோருக்கு தனித் தனி சன்னதிகள் கொண்ட திரெளபதியம்மன் கோயில் அமைந்துள்ளது. மகாபாரதம் காலத்துடன் தொடர்புகொண்ட இந்தக் கோயில் பல நூற்றாண்டுகள் கடந்த மிகப் பழைமையான கோயில்களில் ஒன்றாகும். இந்தக் கோயிலை புனரமைத்து 3 நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம், கொடிமரம் ஆகியவை அமைக்கும் திருப்பணி கோயில் நிர்வாகக் குழுவினர் மற்றும் நகர பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பணிகள் நிறைவடைந்த நிலையில், ராஜகோபுரம் மற்றும் புதிதாக அமைக்கப்பட கொடிமரங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்திட முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, சனிக்கிழமை விக்னேஷ்வர பூஜையுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தொடங்கின. ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் கால யாக பூஜை, ஹோமம், தீபாராதனை, மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன. திங்கள்கிழமை காலை நான்காம் கால யாக பூஜையுடன் கும்பாபிஷேகத்துக்கான பூஜைகள் நடைபெற்றன. புன்னிய நதிகளிலிருந்து எடுத்து வரப்பட்ட தீர்த்தம் அடங்கிய கடத்துடன் சிவாச்சாரியார்கள், தீட்சிதர்கள் கோயிலை வலம் வந்தனர். பின்னர், வேத மந்திரங்கள் முழங்க விமானம், ராஜகோபுரங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பரிவாரங்கள், மூலவர் அம்பாள் உள்ளிட்டோருக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
மாலையில் திருக்கல்யாண நிகழ்ச்சியும், இரவில் திருவீதி உலாவும் நடைபெற்றது. இந்த நிகழ்வுகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை பழைய வண்டிப்பாளையம் நகரவாசிகள் செய்திருந்தனர்.