கடலூரில் அப்பர் கரையேறிய நிகழ்வு: திரளானோர் தரிசனம்

கல்லைக்கட்டி கடலில் வீசப்பட்ட அப்பர் கரையேறிய நிகழ்வு கடலூரில் திங்கள்கிழமை நிகழ்த்திக் காட்டப்பட்டது.

கல்லைக்கட்டி கடலில் வீசப்பட்ட அப்பர் கரையேறிய நிகழ்வு கடலூரில் திங்கள்கிழமை நிகழ்த்திக் காட்டப்பட்டது.
 சுமார் 1,300 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட சமண மதத்தைச் சேர்ந்த மகேந்திரவர்ம பல்லவ மன்னனுக்கும், சைவ மதத்தைப் பின்பற்றிய 63 நாயன்மார்களில் ஒருவரான அப்பருக்கும் இடையே வார்த்தைப் போர் ஏற்பட்டது. இதையடுத்து, அப்பரை கொலை செய்ய மன்னர் பல்வேறு வழிகளைக் கையாண்டபோதிலும் அதிலிருந்து அவர் மீண்டு வந்தார். எனவே, அப்பர் உடலில் கல்லைக்கட்டி கடலில் வீசிட மன்னர் உத்தரவிட்டார்.
 இதன்படி, கடலில் வீசப்பட்ட அப்பர், சிவபெருமானை நினைத்து சொற்றுணை வேதியன் எனத் தொடங்கும் நமசிவாய திருப்பதிகத்தை ஓதத் தொடங்கினார். இதனால், அந்தக் கல் தண்ணீரில் மிதக்க தொடங்கியதோடு, அதுவே தெப்பமாக மாறி அவரை கடலூர் அருகே பழைய வண்டிப்பாளையத்தில் கரையேற்றியதாக நம்பப்படுகிறது. இதனால், அந்த ஊர் கரையேறவிட்ட குப்பம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் அப்பரடிகள் கரையேறிய பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
 இதன்படி, திங்கள்கிழமை அப்பரடிகள் கரையேறவும், திருப்பாதிரிபுலியூர் பாடலேஸ்வரர் கோயிலில் இருந்து பெரியநாயகி உடனுறை பாடலேஸ்வரப் பெருமாள் ரிஷப வாகனத்தில் பழைய வண்டிப்பாளையம் கரையேறவிட்ட நகரில் எழுந்தருளினார். அப்பர் கரையேறவும் அவருக்கு பாடலேஸ்வரர் வரவேற்பு அளித்து அழைத்து வந்தார். பின்னர், தீபாராதனை நடைபெற்று புது வண்டிப்பாளையம் வீதிகள் வழியாக பழைய வண்டிப்பாளையம் கற்பக பிள்ளையார் வீதியிலுள்ள வாகீசர் மண்டகபடியில் எழுந்தருளினர். அங்கிருந்து, புறப்பட்டு திருப்பாதிரிபுலியூர் கோயிலை வந்தடைந்தனர். இந்த நிகழ்வுகளில் இந்து சமய அறநிலையத் துறை தக்கார் ரேணுகாதேவி, செயல் அலுவலர் ப.முத்துலெட்சுமி மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
 பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் அப்பர் தெப்பத் திருவிழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
 இந்தக் கோயிலில் சித்திரை சதய திருவிழா கடந்த சனிக்கிழமை தொடங்கியது. முதல் நாள் விழாவில் திருபள்ளியெழுச்சியில் திலகவதியார் திருவாளன் திருநீற்றை மருள்நீக்கியாருக்கு அளித்தலும், வீரட்டானப் பெருமான் அருளால் சூலை நோய் நீக்கி நாவரசர் என்ற திருப்பெயர் பெற்று தடுத்தாட்கொண்டருளிய நிகழ்ச்சியும், மாலையில் காடவர்கோனால் ஏவப்பட்ட அமைச்சர்கட்கு விடை தந்தருளிய நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவின் 2-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை சமணர்கள் அப்பர் பெருமானை நீற்றறையில் இடுதல், அவருக்கு நஞ்சூட்டுதல், யானையை ஏவுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 விழாவின் மூன்றாம் நாளான திங்கள்கிழமை சமணர்கள் அப்பரை கடலில் வீழ்த்திய (தெப்பத் திருவிழா) ஐதீக நிகழ்ச்சியும், அடியார்களை எதிர்கொள்ள திருப்பாதிரிபுலியூரில் கரையேறிய நிகழ்ச்சியும், திருவதிகையில் எழுந்தருளி காடவர்கோனை சைவனாக்கி குணபரவீச்சுரத்தைக் கட்டுவித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு மாலை 5 மணியளவில் அப்பர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர், இரவு 9 மணியளவில் தெப்பத் திருவிழா நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com