கடலூர் துறைமுகத்தில் முதலாம் புயல் எச்சரிக்கைக் கூண்டு
By DIN | Published On : 27th April 2019 06:59 AM | Last Updated : 27th April 2019 06:59 AM | அ+அ அ- |

கடலூர் துறைமுகத்தில் முதலாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது.
வங்கக் கடலில் சென்னையிலிருந்து சுமார் 1,400 கி.மீ. தொலைவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறவும், தொடர்ந்து புயலாக வலுவடையவும் வாய்ப்புள்ளது. இந்தப் புயல் சின்னமானது வடமேற்கு திசையில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கரையை நோக்கி நகருமென கடலூர் வானிலை மையம் தெரிவித்தது.
புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் வருகிற 29-ஆம் தேதி மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்திலும், 30-ஆம் தேதி அதிகபட்சமாக 70 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக கடலூர் துறைமுகத்தில் புயல் தூர முன்னறிவிப்புக்கான கொடி எண்-1 வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் ஏற்றப்பட்டது. மேலும், ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர்கள் வருகிற 28-ஆம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும் என்று சிறப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு, மற்ற மீனவர்களும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடல் சீற்றம்: காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக கடலூர் தேவானம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் கடல் சீற்றம் வெள்ளிக்கிழமை அதிகமாகக் காணப்பட்டது. எனவே, கடற்கரை பகுதியில் பொதுமக்களை காவல் துறையினர் அனுமதிக்கவில்லை.