சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று மகாபிஷேகம்
By DIN | Published On : 27th April 2019 07:00 AM | Last Updated : 27th April 2019 07:00 AM | அ+அ அ- |

சிதம்பரம் நடராஜர் கோயிலில் வீற்றுள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமானுக்கு சித்திரை மாத மகா ருத்ர மகாபிஷேகம் சனிக்கிழமை (ஏப்.27) மாலை நடைபெறுகிறது.
இந்தக் கோயிலில் சித் சபையில் உள்ள மூலவரான ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு சித்திரை, ஆனி, ஆவணி, மார்கழி, மாசி, புரட்டாசி மாதங்களில் ஆண்டுக்கு 6 முறை மகாபிஷேகம் நடைபெறுவது தொன்று தொட்டு நடைபெறும் வழக்கமாகும். ஆனித் திருமஞ்சனம், மார்கழி திருவாதிரை தரிசனம் ஆகிய இரு திருவிழாக்களின்போது ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பும், மற்ற மாதங்களில் மாலை வேளையில் சித் சபையின் வெளியே உள்ள கனகசபையிலும் மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம் என உ.வெங்கடேச தீட்சிதர் தெரிவித்தார்.
இந்த நிலையில், சித்திரை மாத மகாபிஷேகம் சித் சபை முன் உள்ள கனகசபையில் சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்வில்,
ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு பால், சந்தனம், தேன், தயிர், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், புஷ்பம், விபூதி உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற உள்ளது. மகாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்கள் செய்துள்ளனர். மகாபிஷேகத்தை முன்னிட்டு மகா ருத்ர யாகம் சனிக்கிழமை காலையில் தொடங்கி மாலை வரை நடைபெறுகிறது.