மண்வள அட்டை முடிவுகள் மறுசீராய்வு

மண்வள அட்டை மூலமாக தெரிவிக்கப்பட்ட முடிவுகளை மறுசீராய்வு செய்யும் பணி கடலூரில் நடைபெற்று வருகிறது. 


கடலூர்: மண்வள அட்டை மூலமாக தெரிவிக்கப்பட்ட முடிவுகளை மறுசீராய்வு செய்யும் பணி கடலூரில் நடைபெற்று வருகிறது.
 இதுகுறித்து கடலூர் மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின்கீழ் மண்வள அட்டை வழங்கும் திட்டத்தில் கடலூர் வட்டாரம், வெள்ளப்பாக்கம் கிராமத்தில் மேற்பரப்பு மற்றும் ஆழத்தில் மண் மாதிரிகள் சேகரிக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. முன்னோடி விவசாயி ஜெயராமன் வயலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கடலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சு.பூவராகன் தலைமை வகித்தார். வேளாண்மை அலுவலர் முகமது நிஜாம், மண் மாதிரிகள் சேகரிக்கும் விதம் குறித்து விளக்கினார்.
 அதன்படி, கடந்த 2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மண்வள அட்டை இயக்கத்தின்கீழ் கடலூர் வட்டாரத்தில் உள்ள 77 வருவாய் கிராமங்களிலும் அடங்கிய 16,305 பண்ணை குடும்பங்களுக்கு கிரிடு (தொகுப்பு) முறையில் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மண்வள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 2015-16 மற்றும் 2016-17-ஆம் ஆண்டுகளில் முதல் சுழற்சியின் அடிப்படையிலும், 2017-18 மற்றும் 2018-19-ஆம் ஆண்டுகளில் இரண்டாம் சுழற்சியின் அடிப்படையிலும் அனைத்து விவசாயிகளின் நிலங்களிலிருந்து மண் மாதிரிகள் சேகரித்து ஆய்வு செய்து மண்வள அட்டை மூலம் சாகுபடி பயிர்களுக்குரிய உர பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த பரிந்துரைகளின்படியே உரங்களை வாங்கி பயன்படுத்த விவசாயிகளுக்கும், உர விற்பனையாளர்களுக்கும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. 
 தற்போது கடந்த 4 ஆண்டுகளில் சேகரித்த மண் மாதிரிகளின் ஆய்வு முடிவுகளை ஒப்பிட்டு சரிபார்க்கவும், தர நிர்ணயம் செய்ய ஏதுவாகவும் ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் எதேச்சையாக 10 இடங்களில் 6 அங்குல ஆழத்திலிருந்து மேற்பரப்பு மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட உள்ளன. 
மேலும் மண் தொடர் வாகு அடிப்படையிலும், அட்ச ரேகை, தீர்க்க ரேகை விவரங்கள் குறிக்கப்பட்டு, ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் 3 இடங்களில் 50 செ.மீ. ஆழமுள்ள குழிகள் எடுத்து மேலிருந்து கீழாக 25 செ.மீ.-க்கு 1 மாதிரியும், 25 முதல் 50 செ.மீ. ஆழத்துக்கு ஒரு மாதிரியும் ஆக மொத்தம் 2 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட உள்ளன. இந்தப் பணிகள் அனைத்தையும் வருகிற ஜுன் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 
இந்த ஆய்வு முடிவுகள், மண் வகையீடு மற்றும் நிலப் பயன்பாடு குறித்த விவரங்கள் நிறுவனத்துக்கு அனுப்பி சரிபார்க்கப்பட்டு தர நிர்ணயம் செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com