முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
என்எல்சி நிறுவனத்தைக் கண்டித்து விவசாயிகள் நாளை போராட்டம்
By DIN | Published On : 04th August 2019 12:47 AM | Last Updated : 04th August 2019 12:47 AM | அ+அ அ- |

என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காததைக் கண்டித்து, திங்கள்கிழமை (ஆக.5) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் அறிவித்தது.
இதுகுறித்து கூட்டியக்கத்தின் மாநிலப் பொதுச் செயலர்
பெ.ரவீந்திரன், என்எல்சி நிறுவனத்துக்கு வீடு, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கத் தலைவர் ஆர்.பரமசிவம் ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கை: கடந்த 1956-ஆம் ஆண்டு முதல் என்எல்சி நிறுவனத்தின் சுரங்கம் 1, சுரங்கம் 1-ஏ, சுரங்கம் 2, தெர்மல் பவர் ஸ்டேஷன் ஆகியவற்றுக்கு 15-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டு, மாற்றிடத்தில் புலம் பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு வேலை கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், மறு குடிஅமர்வு, மறு வாழ்வு உள்ளிட்ட சட்டப்படி அவர்களுக்கு வழங்க வேண்டிய உரிமைகளை என்எல்சி நிர்வாகம் வழங்கவில்லை. நிலம் கையகப்படுத்திய தமிழக அரசும் மவுனமாக இருப்பது வேதனைக்குரியது.
எனவே, என்எல்சி நிறுவனத்துக்கு நிலம் கொடுத்த விவசாயிகள், பணி நிரந்தரம் கோரும் ஒப்பந்தப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, திங்கள்கிழமை இந்திரா நகரில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும். இந்தப் போராட்டத்தில் விவசாயிகள், பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்று ஆதரவளிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.