இலங்கியனூர் ரயில் பாதை அருகே  தடுப்புச் சுவர் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு

இலங்கியனூரில் ரயில் பாதை அருகே ரயில்வே நிர்வாகம் தடுப்புச்சுவர் கட்டக் கூடாதென அந்தப் பகுதியினர் வலியுறுத்தினர்.

இலங்கியனூரில் ரயில் பாதை அருகே ரயில்வே நிர்வாகம் தடுப்புச்சுவர் கட்டக் கூடாதென அந்தப் பகுதியினர் வலியுறுத்தினர்.
வேப்பூர் வட்டம், இலங்கியனூர் கிராமத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் வழியாக விருத்தாசலம் - சேலம் ரயில் பாதை செல்கிறது. இந்தப் பாதையில் கேட் எண் 73, 74 ஆகியவை அமைந்துள்ளன. இரு பாதைகளும் இந்தப் பகுதியில் சுமார் 75 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் எண் 74-இல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. இதனால், இந்த பாதை வழியாக கனரக வாகனங்கள் செல்ல முடியாததோடு, மழைக் காலத்தில் சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்குவதால் இருசக்கர வாகனங்கள், பாதசாரிகள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. 
 அதிகளவில் விவசாய நிலங்களைக் கொண்ட இந்தப் பகுதியில் அறுவடைக்குத் தேவையான இயந்திரங்கள் அனைத்தும் கேட் எண் 73 வழியாகவே வந்துச் செல்கின்றன. மங்கலம்பேட்டை - உளுந்தூர்பேட்டை சாலையான இந்தச் சாலை வழியாகவே பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் வாகனங்கள் மற்றும் பொது வாகனப் போக்குவரத்து நடைபெறுகிறது. 
தற்போது, கேட் எண் 73-இல் ரயில்வே நிர்வாகம் நிரந்தரமாக தடுப்புச் சுவர் கட்டுவதற்கு முயற்சித்து வருவதாக அந்தப் பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
 இதுகுறித்து,  பொது மக்கள் சார்பில் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொ.பிரேம்குமார் கூறியதாவது: ரயில்வே பாதை எண் 73- இல் தடுப்புச் சுவர் அமைத்தால் 50 கிராம மக்களும், சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் பயிரிட்டுள்ள விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள். ஏனெனில், தற்போது தடுப்புச்சுவர் அமைக்க முடிவெடுத்துள்ள ரயில்வே கேட் எண் 73 மங்கலம்பேட்டை- உளுந்தூர்பேட்டை சாலையில் அமைந்துள்ளது. தடுப்புச் சுவர் கட்டப்பட்டு அதில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டால் விவசாய தேவைக்கான இயந்திரங்களை கொண்டு செல்ல முடியாது. இந்தக் கிராமத்தினர் வட்டாட்சியர் அலுவலகம் செல்ல வேண்டும் என்றால் சுமார் 20 கி.மீ. தொலைவுக்கு சுற்றிச்செல்ல வேண்டியிருக்கும். எனவே, தடுப்புச்சுவர் அமைக்காமல் நிரந்தரமாக கேட் கீப்பர் நியமிக்க வேண்டும். இதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்துள்ளோம் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com