கடன் தொகையை செலுத்தியும் டிராக்டர் தர மறுப்பு: வங்கி மீது விவசாயி புகார்

வங்கியில் கடன் தொகையை முழுமையாகச் செலுத்தியும் டிராக்டரை தர மறுப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் விவசாயி புகார் தெரிவித்தார்.

வங்கியில் கடன் தொகையை முழுமையாகச் செலுத்தியும் டிராக்டரை தர மறுப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் விவசாயி புகார் தெரிவித்தார்.
கடலூர் வட்டம், தியாகவல்லியைச் சேர்ந்தவர் இரா.சரவணன், விவசாயி. இவர் அண்மையில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகார் மனு: கடந்த 2015-ஆம் ஆண்டு தனியார் வங்கியில் ரூ.4.50 லட்சம் கடன் பெற்று விவசாய பயன்பாட்டுக்காக டிராக்டர் வாங்கினேன். 
கடன் தொகையை முறையாகச் செலுத்தி வந்த நிலையில் ஒரு தவணை மட்டும் செலுத்தவில்லையென கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வங்கியினர் தெரிவித்தனர். அப்போது, இனிமேல் தவணையாக பணம் செலுத்த முடியாது, மொத்தத் தொகையைச் செலுத்தி கடனை முடிக்க வேண்டும், இல்லையென்றால் டிராக்டரை பறிமுதல் செய்து விடுவோம் என்று மிரட்டினர். இதனால், எனது டிராக்டரை கீரப்பாளையத்திலுள்ள வங்கிக் கிளையில் ஒப்படைத்துவிட்டேன். 
அதன்பிறகு நான் செலுத்த வேண்டிய தவணைத் தொகைக்காக செப்டம்பர் மாதத்தில் 3 தவணைகளில் ரூ.99 ஆயிரம் செலுத்தினேன். ஆனால், வங்கியினர் மொத்தம் ரூ.1.37 லட்சம் செலுத்தினால் கடன் தொகை முழுமையாக பைசல் செய்யப்படுவதுடன்  டிராக்டரும் திருப்பித் தரப்படும் என்று தெரிவித்தனர். அதை நம்பி டிசம்பர் மாதம் ரூ.1.37 லட்சம் செலுத்தினேன். ஆனால், மீண்டும் ரூ.53 ஆயிரம் மட்டும் செலுத்த வேண்டும் என்று கூறுவதுடன், இதைச் செலுத்தாவிட்டால் டிராக்டரை எடுக்க முடியாது என்று கூறி வருகின்றனர். 
கடன் பெற்று வாங்கப்படும் டிராக்டரை முழுமையாக இயக்கினால்தான் அதன்மூலம்  வருமானம் ஈட்டி கடனை திருப்பிச் செலுத்த முடியும். ஆனால், ஒரு தவணை கட்டத் தவறியதற்காக மிரட்டல் விடுத்ததுடன், பணத்தை முழுமையாகச் செலுத்திய பிறகும் 7 மாதங்களுக்கு மேலாக டிராக்டரை ஒப்படைக்க மறுக்கின்றனர். இதனால், எனது வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, வங்கி மீது உரிய நடவடிக்கை எடுத்து டிராக்டரை பெற்றுத்தர வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com