ஆட்சியரகத்தில் கிராம மக்கள் தர்னா

மு.பட்டிகுடிகாடு கிராமத்தில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாகக் கூறி அந்தக் கிராம மக்கள்

மு.பட்டிகுடிகாடு கிராமத்தில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாகக் கூறி அந்தக் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
 விருத்தாசலம் வட்டம், மு.பட்டிகுடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித். இவர் கடந்த சனிக்கிழமை தனது உறவுப் பெண்ணுடன் அந்தப் பகுதியில் பைக்கில் சென்றாராம். அப்போது, அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் அஜித் மற்றும் அந்தப் பெண்ணிடம் தகராறு செய்து அவர்களை தாக்கினராம். 
இதனால், அந்த கிராமத்தில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. எனவே, அந்தக் கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு  போடப்பட்டது. இதுதொடர்பாக மங்கலம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து 3 பேரை கைது செய்தனர்.
  இந்த பிரச்னையில் உரிய தீர்வு காண வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்புச் செயலர் தி.ச.திருமார்பன், மண்டலச் செயலர் சு.திருமாறன் ஆகியோர் தலைமையில் அந்த கிராம மக்கள் கடலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனர். 
அவர்களை நுழைவு வாயிலில் போலீஸார் தடுத்து நிறுத்தினர். எனினும் வாக்குவாதத்துக்குப் பின்னர் உள்ளே நுழைந்தவர்கள் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். பின்னர், மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். 
அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: மு.பட்டிகுடிகாடு கிராமத்தில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 
எனவே, அந்தப் பகுதியில் மோதலைத் தவிர்க்கும் வகையில் தலித் மக்களுக்கு தனியாக நியாய விலைக்கடை, குடிநீர்த் தொட்டி, பேருந்து நிறுத்தம் ஆகியவை ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டுமென வலியுறுத்தினர்.
இதையடுத்து, மு.பட்டிகுடிகாடு கிராமத்தை நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி அளித்ததாக விசிக நிர்வாகிகள் தெரிவித்தனர். 
பின்னர் கிராம மக்கள் கலைந்து சென்றனர். விசிக ஒன்றியச் செயலர் சுப்புஜோதி, ஊர் நிர்வாகி கோ.ஜெயராமன் உள்ளிட்டோர்  பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com