சுடச்சுட

  

  அஞ்சலையம்மாளின் தியாகம் போற்றப்பட வேண்டும்: தமிழறிஞர்கள் வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 15th August 2019 07:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  "தென்னாட்டு ஜான்ஸி ராணி' என்று மகாத்மா காந்தியடிகளால் அழைக்கப்பட்ட அஞ்சலையம்மாளின் தியாகம் போற்றப்படும் வகையில் அவரது பெயரை தெருவுக்குச் சூட்ட வேண்டும் என தமிழறிஞர்கள் வலியுறுத்தினர்.
  அடிமைப்பட்டுக் கிடந்த நமது தாய் நாட்டை மீட்க கணக்கிலடங்காதவர்கள் தங்களது இன்னுயிரை ஈந்து சுதந்திரம் பெற்றுத் தந்தனர். அவர்
  களுள் ஒருவர் அஞ்சலையம்மாள்.
  கடலூர் முதுநகரில் கடந்த 1890 -ஆம் ஆண்டில் பிறந்த இவர், தனது இளம் வயதில், பெண்களை திரட்டி மாதர் சங்கம் தொடங்கி,  விடுதலைப் போராட்ட செய்திகளை அவர்களுக்குத் தெரிவித்து, அந்த வேள்வியில் அவர்களை ஈடுபடுத்தினார். 
  கடந்த 1918 -ஆம் ஆண்டு கடலூருக்கு வந்த காந்தியடிகளை குதிரை வண்டியில் ரகசியமாக வந்து சந்தித்துச் சென்றார் அஞ்சலையம்மாள். போலீஸாரின் கெடுபிடிகளையும் மீறி அவர் இந்தச் செயலில் ஈடுபட்டதால், அவருக்கு காந்தியடிகள் "தென்னாட்டு ஜான்ஸி ராணி' என்ற பட்டத்தை வழங்கினார்.
  அன்று முதல் அஞ்சலையம்மாள் தனது கணவர் முருகன் படையாச்சியாருடன் சேர்ந்து பல்வேறு கிராமங்களுக்கும் சென்று விடுதலை உணர்வை ஊட்டி வளர்த்தார். மேலும், காந்தியடிகள் அறிவிக்கும்  போராட்டங்களிலும் கலந்து கொண்டார். இதன் காரணமாக பல ஆண்டுகளை அவர் சிறையில் கழித்தார். அவ்வாறு பெல்லாரி சிறையில் இருந்த போது லீலாவதி என்ற குழந்தையையும், வேலூர் சிறையில் இருந்த போது, ஜெயில் வீரன் என்ற குழந்தையையும் பெற்றெடுத்தார். 
  இவ்வாறு பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு தாய் நாடு சுதந்திரம் பெற அரும்பாடுபட்டார் அஞ்சலையம்மாள். இந்தப் போராட்டங்களுக்கிடையே 3 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அவரது தியாகத்தைப் போற்றும் வகையில், கடலூரில் அவர் தொடர்பான எந்தவிதமான நினைவுச் சின்னமும் இல்லை. இது தேசப்பற்றாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
  இதுகுறித்து கடலூர் மாவட்ட பாரதிதாசன் இலக்கிய மன்றத்தின் தலைவர் கடல்.நாகராஜன் கூறியதாவது:
  சுதந்திரப் போராட்டத்தில் பங்குகொண்ட வீரப் பெண்மணிக்கு கடலூரில் நினைவுச் சின்னம் இல்லாதது வருத்தமளிக்கிறது. அவரது நினைவைப் போற்றும் வகையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும். அதன் முதல் கட்டமாக, அவர் வசித்த சுண்ணாம்புக்கார வீதிக்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டும். அவரது மகன் ஜெயில் வீரன் (எ) 
  ஜெயவீரன் தற்போது அதே தெருவில் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறார். அவருக்கு தியாகி வாரிசுக்கான ஓய்வூதியம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றார் அவர்.
  இதுதொடர்பாக வரலாற்று ஆய்வாளர் சாமிகச்சிராயர் கூறியதாவது:
  அஞ்சலையம்மாள் குறித்து அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் ஆவணப்படம் ஒன்றைத் தயாரித்து வருகிறோம். முன்பெல்லாம் அவரது நினைவைப் போற்றும் வகையில் கூட்டங்கள் நடத்தப்பட்டன. 
  தற்போது அவ்வாறு நடைபெறாதது வருத்தமளிக்கிறது. கடலூரில் பல்வேறு இடங்களில் பிரிட்டிஷ்காரர்களின் பெயர்கள் சூட்டப்பட்டு, அழைக்கப்பட்டு வருகின்றன. இதை மாற்றி, தியாகி அஞ்சலையம்மாளின் பெயரை அவர் வசித்த தெருவுக்குச் சூட்ட வேண்டும் என்றார் அவர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai