சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தி 10 லட்சம் யூனிட்டை கடந்து சாதனை: என்எல்சி தலைவர் ராக்கேஷ்குமார்

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தி அளவு ஒரு ஜிகாவாட் எனப்படும் மணிக்கு 10 லட்சம் யூனிட்டை

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தி அளவு ஒரு ஜிகாவாட் எனப்படும் மணிக்கு 10 லட்சம் யூனிட்டை   கடந்து சாதனை படைத்துள்ளதாக அதன் தலைவர் ராக்கேஷ்குமார் தெரிவித்தார்.
நாட்டின் 73-ஆவது சுதந்திர தின விழா என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சார்பில், வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. நெய்வேலி நகர நிர்வாக அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு என்எல்சி தலைவர் ராக்கேஷ்குமார் மாலை அணிவித்து விழாவைத் தொடக்கி வைத்தார். பாரதி விளையாட்டரங்கில் தேசியக் கொடியேற்றினார். பின்னர், என்எல்சி பாதுகாப்புப் படை, மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை, தீயணைப்புப் படை, ஊர்க்காவல் படை, தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம், சாரண-சாரணியர், பள்ளி, கல்லூரி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பின்னர், அவர் பேசியதாவது: 3,240 மெகாவாட்டாக இருந்த மின் உற்பத்தி அளவு கடந்த 5 ஆண்டுகளில் 60 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. அனல் மின் சக்தி மற்றும் புதுப்பிக்கவல்ல ஆற்றல் உள்பட 5,193 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. புதிய திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள், ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியை அறிவிக்கும் குறியீடாக கருதப்படுகிறது.  அந்த வகையில், என்எல்சி இந்தியா நிறுவனம் ஒரு ஆண்டில் ரூ. 7,208 கோடிக்கும் அதிகமான புதிய திட்டங்களில் 
முதலீடு செய்து சாதனை படைத்துள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளில் 30 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. 
ஊழியர்களின் நலனைப் பராமரிப்பதில் தொடர்ந்து சிறப்பான நடைமுறைகளை மேற்கொண்டு வருகிறோம். கடந்த நிதியாண்டில் (2018-2019) பங்குதாரர்களுக்கு 45.30 சதவீதம் பங்கு ஈவுத் தொகை வழங்கியுள்ளோம். அதேபோல, என்எல்சி தமிழ்நாடு மின் நிறுவனமும் 5 சதவீத பங்கு ஈவுத் தொகை வழங்கியுள்ளது.
கடந்த நிதியாண்டில் துணை நிறுவனங்களின் வர்த்தகம் உள்பட ரூ. 9,871 கோடி வர்த்தகம் மேற்கொண்டுள்ளது. வரிக்கு முந்தைய லாபமாக ரூ. 2,561 கோடி, பிந்தைய லாபமாக ரூ. 1,537 கோடியை பெற்றுள்ளது. சமூகப் பொறுப்புணர்வுத் திட்டப் பணிகள் மேற்கொள்ள ரூ. 53.15 கோடி வழங்கியுள்ளோம் என்றார் அவர்.
நிகழ்வில், பொருள் மேலாண்மை வளாகத்தில் சிறப்பு நிலை உதவியாளராகப் பணியாற்றி வரும் 
எஸ்.வைஜெயந்தி மாலா, அவரது கணவர் எஸ்.செல்வராஜு இருவரும், என்எல்சி தலைவர் ராக்கேஷ்குமார், அவரது மனைவி கஞ்சன் கம்ரா ஆகியோரால் கெளரவிக்கப்பட்டனர். இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த எஸ்.சிவபாலன், சி.விஜயகுமார் ஆகியோருக்கு 3 சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன.
பாரதி விளையாட்டரங்கில் 4 ஆயிரம் பள்ளிக் குழந்தைகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக விழாவில் மனித வளத் துறை இயக்குநர் ஆர்.விக்ரமன் வரவேற்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com