அண்ணாமலைப் பல்கலை.யில் கிராமப்புற சமூக ஈடுபாடு குறித்த மேம்பாட்டுப் பயிற்சி முகாம்
By DIN | Published On : 23rd August 2019 07:59 AM | Last Updated : 23rd August 2019 07:59 AM | அ+அ அ- |

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மகாத்மா காந்தி தேசிய ஊரகக் கல்வி நிறுவனம் ஆகியவை சார்பில், பல்கலைக்கழகப் பேராசியர்களுக்கான கிராமப்புற சமூக
ஈடுபாடு குறித்த மேம்பாட்டுப் பயிற்சி முகாம் கல்வியியல் துறையில் புதன்கிழமை தொடங்கியது.
5 நாள்கள் நடைபெறும் இந்த முகாமின் தொடக்க விழாவுக்கு கல்வியியல் துறைத் தலைவர் ஆர்.பாபு தலைமை வகித்தார். மொழியியல் புல முதல்வர் மற்றும் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் வி.திருவள்ளுவன் பயிற்சி முகாமைத் தொடக்கிவைத்து உரையாற்றினார். கல்வியியல் புல முதல்வர் ஆர்.ஞானதேவன் சிறப்புரையாற்றினார். திண்டுக்கல் காந்தி கிராமப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜி.பழனிதுரை, கிராமப்புற சமூக ஈடுபாடு குறித்தும், பல்கலைக்கழக ஆசிரியர்களின் பங்கு குறித்தும் எடுத்துரைத்தார். மகாத்மா காந்தி தேசிய ஊரகக் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த நவீன்குமார் கலந்து கொண்டு பயிற்சி குறித்து பேசினார். விழா ஏற்பாடுகளை முனைவர் எஸ்.வீணா, கே.பிரவீணா ஆகியோர் செய்திருந்தனர். ஒருங்கிணைப்பாளர் எஸ்.வீணா வரவேற்றார். ஓ.பிரவீணா நன்றி கூறினார். இந்தப் பயிற்சி முகாமில் பல்வேறு துறைகளைச் சேர்நத 25-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.