சிறப்பு குறைதீர் கூட்டத்துக்கு  மனு அளிக்கலாம்: மாவட்ட ஆட்சியர்

கடலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள முதல்வரின் சிறப்பு குறைதீர்வு கூட்டத்தில் பங்கேற்க மனுக்களை அளிக்கலாம்

கடலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள முதல்வரின் சிறப்பு குறைதீர்வு கூட்டத்தில் பங்கேற்க மனுக்களை அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்தார்.
 தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த ஜூலை 18-ஆம் தேதி சட்டப் பேரவையில் விதி எண் 110-இன் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல்வரின் சிறப்பு குறைதீர்வு கூட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தார். அதனடிப்படையில் சேலம் மாவட்டத்தில் முதல்வரின் தலைமையில் இந்தக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, மற்ற மாவட்டங்களிலும் இந்தக் கூட்டங்களை நடத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதல்வரின் அறிவிப்புக்கு இணங்க கடலூர் மாவட்டத்தில் உள்ள  நகராட்சிகள், 
பேரூராட்சிகளில் வார்டு வாரியாகவும்,  ஊரகப் பகுதிகளில் கிராம வாரியாகவும் முதல்வரின் சிறப்பு குறைதீர்வு கூட்டம்  நடைபெறவுள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் மனுக்கள் பெற குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுக்கள் மேற்கூறிய பகுதிகளில் வருகிற 27-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை மனுக்களை பெற உள்ளனர். மனுக்கள் பெறும் நாள், பெறும் இடம் குறித்த விவரங்கள் தொடர்புடைய வட்டாட்சியர்களால் அந்தந்த பகுதிகளில் விளம்பரம் செய்யப்படும். இந்த முகாமில், குடிநீர், சாலை, சுகாதாரம், தெருவிளக்கு வசதி போன்ற அடிப்படை தேவைகள் தொடர்பான மனுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து தீர்வு காணப்படும். எனவே பொதுமக்கள் அனைவரும் மேற்படி முகாமில் தங்களது ஆதார் அட்டை நகலுடன் மனு செய்து பயன்பெறுமாறு மாவட்ட  நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்வதாக ஆட்சியர் அதில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com