பொன்னி விதை நெல்லுக்கு தட்டுப்பாடு!

கடலூர் மாவட்டத்தில் பொன்னி விதை நெல்லுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

கடலூர் மாவட்டத்தில் பொன்னி விதை நெல்லுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் கடந்த 1986-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரிசி ரகம் பொன்னி. சுத்தமான நீர் உடைய நிலத்திலும், காவிரி படுகை பகுதிகளிலும் அதிகம் விளைகிறது. எளிதில் ஜீரணிக்கக் கூடியதும், சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற அரிசி ரகமாக உள்ளதால் இதை பொதுமக்கள் விரும்பி வாங்குகின்றனர். 
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதைப் பயன்படுத்தி விவசாயிகள் சம்பா நடவுக்கான நாற்றும் விடும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால், மாவட்டத்தில் பொன்னி விதை நெல்  கிடைக்காததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அயன்குறிஞ்சிப்பாடி உழவர் மன்றத் தலைவர் ஆர்.கே.ராமலிங்கம் கூறியதாவது: குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி நடைபெறுகிறது. 
தற்போது விதைப்புக்கான பருவம், இயற்கையான சூழல் கூடியுள்ள நிலையில் பொன்னி விதை நெல் கிடைக்கவில்லை. குறைந்த உரச் செலவு, பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறைவு, ஏக்கருக்கு 30 மூட்டைகள் வரை மகசூல், தரமான வைக்கோல், நல்ல விலை உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் பொன்னி ரக நெல்லை பயிரிட விரும்புகின்றனர். 
ஆனால், கடலூர் மாவட்டத்தில் வேளாண் துறையினர் பொன்னி விதை நெல் கொள்முதல் செய்வதை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்திவிட்டனர். 
இந்த வகை நெல் அறிமுகப்படுத்தப்பட்டு பல ஆண்டுகள் கடந்து விட்டதால் விவசாயிகளுக்கு சிபாரிசு செய்வதில்லை. 
ஆனால், விவசாயிகள் பொன்னி ரக நெல்லை பயிரிட விரும்புகின்றனர். தனியார் கடைகளிலும் பொன்னி விதை நெல் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அவை தரமாக இருப்பதில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் பொன்னி விதை நெல் கிடைக்க உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார் அவர்.
இதுகுறித்து குறிஞ்சிப்பாடி வேளாண்மை உதவி இயக்குநர் சின்னக்கண்ணு கூறியதாவது: தற்போது பொன்னி நெல் ரகத்தை விவசாயிகள் அதிகம் பயிரிடுவதில்லை. 
அதற்குப் பதிலாக வறட்சி, வெள்ளத்தை தாங்கி வளரக்கூடிய புதிய ரகங்கள் வந்துவிட்டன. அரசும் பொன்னி விதை நெல் உற்பத்திக்கான மானியத்தையும் வழங்கவில்லை. இதனால், பொன்னி விதை நெல் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com