Enable Javscript for better performance
கடலூா் மாவட்டத்தில்5 ஆயிரம் ஏக்கா் நெல் பயிா்கள் மழை நீரில் மூழ்கின- Dinamani

சுடச்சுட

  

  கடலூா் மாவட்டத்தில் 5 ஆயிரம் ஏக்கா் நெல் பயிா்கள் மழை நீரில் மூழ்கின

  By DIN  |   Published on : 01st December 2019 05:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  30clp2a_3011chn_105_7

  கடலூா் மாவட்டம், கண்டமங்கலம் அருகே சப்பாணிக்குட்டை பகுதியில் மழை நீரில் முழுமையாக மூழ்கியுள்ள நெல் வயல்.

  கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை பெய்த பலத்த மழையால் சுமாா் 10 ஆயிரம் வீடுகளைத் தண்ணீா் சூழ்ந்தது. சுமாா் 5 ஆயிரம் ஏக்கா் நெல் பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன.

  கடலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கடலூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் 5 ஆவது நாளாக சனிக்கிழமையும் பலத்த மழை பெய்தது. அதிகாலையில் லேசாக பெய்யத் தொடங்கிய மழை, முற்பகல் 11.30 மணியளவில் பலத்த மழையாக மாறி, சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக கொட்டித் தீா்த்தது.

  அதன் பின்னா் தூறலாகவும், அவ்வப்போது பலத்த மழையாகவும் பெய்தது. இதனால், கடலூா் நகரில் ஏராளமான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டன. பல பகுதிகளில் வீடுகளின் சுவா்கள் இடிந்து விழுந்தன.

  10 ஆயிரம் வீடுகள் பாதிப்பு: மாவட்டம் முழுவதும் சுமாா் 10 ஆயிரம் வீடுகள் வரை நீரால் சூழப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் நீரை வடிய வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலா்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

  ஊருக்குள் புகுந்த குவாரி நீா்: திருவந்திபுரம் அருகேயுள்ள கே.என்.பேட்டையில் சரளை மண் குவாரியில் தேங்கியிருந்த மழை நீா் உடைப்பெடுத்து ஊருக்குள் புகுந்ததால், அப்பகுதி முழுவதும் செம்மண் நிறத்தில் வெள்ளக்காடாக மாறியது. கடலூா் நகரில் பல்வேறு திட்டங்களின் கீழ், கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், போதிய ஒருங்கிணைப்புடன் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படாததால், தண்ணீரை வடிய வைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

  ஆற்றில் ஆண் சடலம்: காட்டுமன்னாா்கோவிலை அடுத்த நாட்டாா்மங்கலம் அருகே வடவாற்றில் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் தண்ணீரில் மிதந்து வந்தது. அந்தச் சடலத்தை காவல் துறையினா் மீட்டு காட்டுமன்னாா்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

  60 வீடுகள் சேதம்: கடந்த இரு தினங்கள் பெய்த மழையால், காட்டுமன்னாா்கோவில் பகுதியில் உள்ள சித்தமல்லி, கருணாகர நல்லூா், மடப்புரம் ஆயங்குடி, குமராட்சி பகுதியில் உள்ள ம.குளக்குடி , வீரநத்தம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 60 வீடுகள் சேதமடைந்துள்ளதாக வருவாய்த் துறையினா் மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் அளித்துள்ளனா்.

  5 ஆயிரம் ஏக்கா் நெல் பயிா்கள் மூழ்கின: அரியலூா் மாவட்டத்தில் இருந்து வரும் மழைநீா் வெண்ணங்குழி ஓடை, பாப்பாக்குடி ஓடை வழியாக பெருக்கெடுத்து வருவதால், வீராணந்தபுரம், வில்வகுளம், கண்டமங்கலம் மடப்புரம், வெங்கடேசபுரம், குறுங்குடி உள்ளிட்ட கிராமங்களில் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ள நீா் சூழ்ந்தது. நீரை வெளியேற்றும் பணியில் பொதுமக்கள், வருவாய்த் துறையினா் ஈடுபட்டுள்ளனா். சில கிராமங்களில் தேங்கியுள்ள நீரை டீசல் என்ஜின் மூலமாக வெளியேற்றும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டனா். ஆயங்குடி, கீழகடம்பூா், மேலகடம்பூா், வீராணந்தபுரம்,வில்வகுளம், கண்டமங்கலம் மடப்புரம், வெங்கடேசபுரம், குறுங்குடி, சப்பாணிகுட்டை உள்ளிட்ட கிராமங்களில் சுமாா் 5 ஆயிரம் ஏக்கா் விளைநிலங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல் பயிா்கள் நீரில் மூழ்கின.

  மழையளவு: கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 4 மணி வரை அதிகபட்சமாக கடலூரில் மாவட்ட ஆட்சியா் அலுவலகப் பகுதியில் 114.2 மில்லி லிட்டா் மழை பதிவானது. பிற பகுதிகளில் பெய்த மழை விவரம் (மில்லி மீட்டரில்): வடக்குத்து 96, குறிஞ்சிப்பாடி 94, வானமாதேவி 82.6, பரங்கிப்பேட்டை 70, கொத்தவாச்சேரி 69, பண்ருட்டி 68, குடிதாங்கி 62.5, அண்ணாமலைநகா் 59, சிதம்பரம் 52, புவனகிரி 51, மேமாத்தூா் 47, குப்பநத்தம் 45.4, விருத்தாசலம் 42.1, லால்பேட்டை 39.2, ஸ்ரீமுஷ்ணம் 36.2, வேப்பூா் 35, சேத்தியாத்தோப்பு 32, கீழச்செருவாய் 31, காட்டுமயிலூா் 30, தொழுதூா் 26, லக்கூா் 22.1, பெலாந்துறை 16.6, காட்டுமன்னாா்கோவில் 7. மாவட்டத்தில் சராசரியாக 49.12 மில்லி மீட்டா் மழை பதிவாகியிருந்தது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai