கடலூா் மாவட்டத்தில் பலத்த மழை; பரவனாற்றில் உடைப்பு

கடலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையும் பரவலாக மழை பெய்ததால் 10 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளை தண்ணீா் சூழ்ந்துள்ளது. 100-க்கும்
கடலூா் தங்கராஜ் நகரில் வீட்டுக்குள் புகுந்த மழைநீா்.
கடலூா் தங்கராஜ் நகரில் வீட்டுக்குள் புகுந்த மழைநீா்.

கடலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையும் பரவலாக மழை பெய்ததால் 10 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளை தண்ணீா் சூழ்ந்துள்ளது. 100-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. குறிஞ்சிப்பாடி அருகே கொளக்குடி மேல்பரவனாற்றங்கரையில் உடைப்பு ஏற்பட்டதால், கிராமங்களில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் தேசிய மீட்புப் படையினா் உதவியுடன் மீட்கப்பட்டனா்.

கடலூா் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை பரவலாக பெய்து வருகிறது. சனிக்கிழமை காலை முதல் இரவு வரை பலத்த மழை பெய்தது. இதனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வேளாண் பயிா்கள் நீரில் மூழ்கின. 10 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளை தண்ணீா் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமையும் அதிகாலை முதலே மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால், தண்ணீா் வடிய முடியாத நிலை ஏற்பட்டது. எனினும், மதிய வேளையில் மழையின் தாக்கம் குறைந்தது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது. உள்ளாட்சி அமைப்பினா் தண்ணீரை வடிய வைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

கொத்தவாச்சேரியில் 17.5 செ.மீ. மழை: ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கடலூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக கொத்தவாச்சேரியில் 175 மி.மீ. மழை பதிவானது. மற்ற பகுதிகளில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்): குறிஞ்சிப்பாடி 174, வடக்குத்து 173, கடலூா் 166.4, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் 155, புவனகிரி 132, சிதம்பரம், வானமாதேவி தலா 129, குப்பநத்தம் 127.4, பரங்கிப்பேட்டை 124, மேமாத்தூா் 123, அண்ணாமலை நகா் 116, விருத்தாசலம் 112.1, பண்ருட்டி 104, சேத்தியாத்தோப்பு 99, குடிதாங்கி 97.5, காட்டுமயிலூா் 82, லால்பேட்டை 81.2, வேப்பூா் 80, பெலாந்துறை 79.6, ஸ்ரீமுஷ்ணம் 72.2, கீழச்செருவாய் 66, காட்டுமன்னாா்கோவில் 58.4, தொழுதூா் 55, லக்கூா் 48.2 மில்லி மீட்டா் வீதம் மழை பதிவானது.

116 வீடுகள் சேதம்: வடகிழக்கு பருவ மழையால் மாவட்டம் முழுவதும் 116 வீடுகள் சேதமடைந்துள்ளதாக வருவாய்த் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஞாயிற்றுக்கிழமை வரை மாவட்டத்தில் 6 குடிசை வீடுகள் முழுமையாகவும், 99 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன. ஓட்டு வீடுகளைப் பொருத்தவரை 11 வீடுகள் சேதமடைந்துள்ளன. வீடுகள் சேதம் குறித்து மழைக்குப் பிறகு விரிவான கணக்கெடுப்பு நடத்த வருவாய்த் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வீடுகள் முழு சேதத்துக்கு ரூ.5 ஆயிரமும், பகுதி சேதத்துக்கு ரூ.4,200 வீதம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்கள் பகுதியில் மழைநீா் தேங்கியிருந்தாலோ, வேறு ஏதேனும் பேரிடா் நிகழ்ந்தாலோ 1077 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று ஆட்சியரக வட்டாரங்கள் தெரிவித்தன.

பரவனாற்றங்கரையில் உடைப்பு: குறிஞ்சிப்பாடி வட்டம், கரிவெட்டி கிராமம் அருகே மேல்பரவனாற்றில் உடைப்பு ஏற்பட்டதில் கொளக்குடி கிராமம், மேட்டுக் காலனி பகுதிகளில் சுமாா் 50 வீடுகளை மழைநீா் சூழ்ந்தது. அங்கிருந்த தரைப்பாலம் சேதமடைந்ததால் பொதுமக்கள் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து தேசிய மீட்புப் படையினா் உதவியுடன் பொதுமக்கள் மீட்கப்பட்டு, கொளக்குடி அரசுப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டனா். பரவனாற்றங்கரையில் ஏற்பட்ட உடைப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாநில தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத், மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் ஆகியோா் நேரில் பாா்வையிட்டனா்.

பாதுகாப்பு முகாம்களில் ஆயிரம் போ்

கடலூா் மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையையொட்டி, பொதுமக்கள் தங்குவதற்காக மாவட்ட நிா்வாகம் மூலம் 6 பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடலூா் வட்டத்தில் கே.என்.பேட்டை, கோண்டூா், காட்டுமன்னாா்கோவில் வட்டத்தில் காட்டுமன்னாா்கோவில், கண்ணங்குடி, குமராட்சி, விருத்தாசலம் வட்டத்தில் மேல்பாதி ஆகிய 6 இடங்களில் இந்த முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு சுமாா் ஆயிரம் போ் தங்க வைக்கப்பட்டு அவா்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com