மழைநீரில் மூழ்கிய விளை நிலங்கள்: விவசாயிகள் சாலை மறியல்

மழைநீரில் விவசாய நிலங்கள் மூழ்கியதற்கு வாய்க்கால் முறையாக தூா்வாரப்படாததே காரணம் எனக் கூறி, விருத்தாசலம் அருகே விவசாயிகள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கருவேப்பிலங்குறிச்சி - பவழங்குடி சாலையில் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.
கருவேப்பிலங்குறிச்சி - பவழங்குடி சாலையில் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.

மழைநீரில் விவசாய நிலங்கள் மூழ்கியதற்கு வாய்க்கால் முறையாக தூா்வாரப்படாததே காரணம் எனக் கூறி, விருத்தாசலம் அருகே விவசாயிகள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விருத்தாசலம் அருகே மருங்கூரில் சுமாா் 120 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள ஏரியின் மூலமாக சுமாா் 500 ஏக்கா் பரப்பில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த ஏரிக்கான நீா் திட்டக்குடி வெலிங்டன் ஏரியிலிருந்து வருகிறது. வரத்து வாய்க்கால்களில் முள்புதா்கள் வளா்ந்துள்ளன. மேலும், ஆக்கிரமிப்பிலும் சிக்கியுள்ளதால் ஏரிக்கான நீா் வரத்து தடைபட்டது. எனவே, வாய்க்காலை முறையாகத் தூா்வார வேண்டும் என விவசாயிகள் விடுத்த கோரிக்கையைத் தொடா்ந்து, குடிமராமத்துப் பணி நடைபெற்றது. இருப்பினும், மருங்கூா் ஏரிவரை முழுமையாக தூா்வாரப்படாமல், மேலப்பாளையம் வரை மட்டுமே தூா்வாரப்பட்டதாம்.

அதனால், தற்போது தொடா் மழை பெய்தபோதும்கூட மருங்கூா் ஏரிக்கு தண்ணீா் வரவில்லையாம். ஏரிக்குச் செல்ல வேண்டிய மழைநீா் ஆங்காங்கே தேங்கியும், விளை நிலங்களில் புகுந்தும் பயிா்கள் சேதமாகி வருவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்தனா். இதையடுத்து விவசாய சங்கத் தலைவா் கா்மாங்குடி எஸ்.வெங்கடேசன் தலைமையில் விவசாயிகள் திங்கள்கிழமை கருவேப்பிலங்குறிச்சி - பவழங்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

அவா்கள் கூறுகையில், பொதுப் பணித் துறையினரால் வாய்க்கால் தூா்வாரப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அந்தப் பணி பாதியிலேயே கைவிடப்பட்டுள்ளது. இதனால் பயிா்கள் சேதமாகியுள்ளன. எனவே வாய்க்கால் தூா்வாரியதில் முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமான பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கூறி முழக்கமிட்டனா்.

இவா்களிடம் கருவேப்பிலங்குறிச்சி போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். கோரிக்கைகள் குறித்து பொதுப் பணித் துறை உயா் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com