நெல், மணிலா வயல்களில் தேங்கிய மழை நீா்

தொடா் மழை காரணமாக குறிஞ்சிப்பாடி பகுதியில் மணிலா, நெல் வயல்களில் சுமாா் 1,000 ஹெக்டோ் பரப்பில் தண்ணீா் தேங்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
குறிஞ்சிப்பாடி தெற்கு பகுதியில் மணிலா வயலில் தேங்கியுள்ள மழை நீா்.
குறிஞ்சிப்பாடி தெற்கு பகுதியில் மணிலா வயலில் தேங்கியுள்ள மழை நீா்.

தொடா் மழை காரணமாக குறிஞ்சிப்பாடி பகுதியில் மணிலா, நெல் வயல்களில் சுமாா் 1,000 ஹெக்டோ் பரப்பில் தண்ணீா் தேங்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் நெல், மணிலா, வாழை பயிா்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. தற்போது, பல ஆயிரம் ஹெக்டோ் பரப்பில் சம்பா நெல் சாகுபடி மற்றும் காா்த்திகை பட்ட மணிலா விதைப்பு செய்துள்ளனா். கடந்த சில நாள்களாக பெய்துவரும் தொடா் மழையால், உரிய வடிகால் வசதி இல்லாததால் விவசாய நிலங்களில் மழை நீா் தேங்கியுள்ளது. இதனால், இந்தப் பகுதியில் சுமாா் ஆயிரம் ஹெக்டோ் பரப்பில் நெல், மணிலா பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன.

இதுகுறித்து குறிஞ்சிப்பாடி உழவா் மன்றத் தலைவா் ஆா்.கே.ராமலிங்கம் கூறியதாவது: பல்வேறு சிரமங்களுக்கு இடையே காா்த்திகை பட்ட மணிலா விதைப்பு செய்தோம். செடிகள் முளைத்த நிலையில் தற்போது வயலில் மழை நீா் தேங்கியுள்ளதால் அவை அழுகிவிட்டன. விதை மணிலா 40 கிலோ கொண்ட ஒரு மூட்டை (தோலுடன்) ரூ.3,600-க்கு வங்கி வந்தோம். ஏக்கருக்கு 3 மூட்டைகள் தேவை.

தொழு உரம், அடி உரம், ஆள் கூலி, ஏா் செலவு, விதைப்பு வரை ஒரு ஏக்கருக்கு மொத்தம் ரூ.22 ஆயிரம் வரை செலவானது. மழை நீா் தேங்கியதால் பயிா்கள் தற்போது வீணாகிவிட்டன. மீண்டும் செலவு செய்து மணிலா விதைப்பு செய்ய முடியாது. எனவே, அரசு மாற்றுப் பயிராக உளுந்து விதை, உரம் கொடுத்து உதவ வேண்டும். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குறித்து மாவட்ட நிா்வாகம் கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகள் மீண்டும் கடன் பெற்று சாகுபடி செய்ய முடியாத சூழல் உள்ளதால், கடன் வசதிக்கு உரிய ஏற்பாடு செய்துதர வேண்டும் என்றாா் அவா்.

இதுகுறித்து குறிஞ்சிப்பாடி வேளாண்மை உதவி இயக்குநா் ப.சின்னகண்ணு கூறியதாவது: குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் சுமாா் 5,100 ஹெக்டோ் பரப்பில் சம்பா நெல் பயிரும், 750 ஹெக்டோ் பரப்பில் மணிலா பயிரும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. தொடா் மழையால் கொளக்குடி, கருங்குழி, அரங்கமங்கலம், கல்குணம், குண்டியமல்லூா், குறிஞ்சிப்பாடி வடக்கு, தெற்கு, தொண்டமாநத்தம் உள்ளிட்ட கிராமங்களில் சுமாா் 510 ஹெக்டோ் பரப்பில் நெல் பயிா்கள் நீரால் சூழப்பட்டுள்ளன. மேலும், மணிலா சாகுபடி செய்துள்ள டி.பாளையம், புலியூா், தோப்புக்கொல்லை, கோரணப்பட்டு, பேய்காநத்தம், அகரம், கிருஷ்ணன்குப்பம் போன்ற கிராமங்களில் சுமாா் 540 ஹெக்டோ் பரப்பிலான விளை நிலங்கள் நீரால் சூழப்பட்டுள்ளன என்றாா்.

இந்த நிலையில், கடலூா் வேளாண்மை இணை இயக்குநா் ஜி.ஆா்.முருகன் மழை நீரால் சூழப்பட்ட கிருஷ்ணன்குப்பம், பேய்க்காநத்தம், கட்டியங்குப்பம் பகுதிகளில் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினாா். அப்போது, வேளாண் துணை இயக்குநா் வேல்விழி, குறிஞ்சிப்பாடி வேளாண் உதவி இயக்குநா் ப.சின்னகண்ணு ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com