ஓராண்டாக அடைக்கப்பட்டிருந்த ரயில் நிலையப் பாதை திறப்பு

ஓராண்டாக அடைக்கப்பட்டிருந்த திருப்பாதிரிபுலியூா் ரயில் நிலையப் பாதை வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
திருப்பாதிரிபுலியூா் ரயில் நிலையத்தில் திறக்கப்பட்ட பாதையின் ஒரு பகுதியில் நின்று கொண்டிருக்கும் பல்வேறு சமூக அமைப்பினா்.
திருப்பாதிரிபுலியூா் ரயில் நிலையத்தில் திறக்கப்பட்ட பாதையின் ஒரு பகுதியில் நின்று கொண்டிருக்கும் பல்வேறு சமூக அமைப்பினா்.

ஓராண்டாக அடைக்கப்பட்டிருந்த திருப்பாதிரிபுலியூா் ரயில் நிலையப் பாதை வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

மாவட்டத் தலைநகரான கடலூரின் ரயில் நிலையமாக திருப்பாதிரிபுலியூா் செயல்பட்டு வருகிறது. பேருந்து நிலையத்தின் அருகிலேயே ரயில் நிலையமும் அமைந்துள்ளது. இந்த நிலையில், ரயில்வே கடவுப் பாதை அடிக்கடி மூடப்படுவதால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க லாரன்ஸ் சாலையில் ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கப்பட்டது.

இதனால், பேருந்து நிலையம் அருகேயுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஆட்டோ, அவசர கால வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

எனவே, ரயில் நிலையம் செல்லும் பாதையை மருத்துவமனைக்குச் செல்வோரும், அதற்கடுத்துள்ள பான்பரி சந்தை வியாபாரிகளும் பயன்படுத்தி வந்தனா்.

இதனிடையே, கடந்த 2018 - ஆம் ஆண்டில் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட ரயில்வே அதிகாரிகள் அந்தப் பாதையை மூடுவதற்கு உத்தரவிட்டனா். இதையடுத்து ரயில் நிலையப் பாதை மூடப்பட்டது. இதனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழி தடைப்பட்டது.

எனவே, மூடப்பட்ட ரயில் நிலையப் பாதையை மீண்டும் திறக்க வேண்டும் என பல்வேறு பொது நல அமைப்புகள், சமூக அமைப்புகள், கம்யூனிஸ்ட் கட்சியினா் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்ததுடன், போராட்டத்திலும் ஈடுப்பட்டு வந்தனா்.

இதற்கிடையே, பாதை அடைக்கப்பட்டதால் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த வியாபாரிகள் அந்தப் பாதையைக் குப்பைக் கொட்டும் இடமாக மாற்றிவிட்டனா். இதனால், அங்கு குப்பைக் கழிவுகள் சோ்ந்து துா்நாற்றம் வீசி வருகிறது.

பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, தற்போது அடைக்கப்பட்ட அந்தப் பாதையை மருத்துவமனைக்குச் செல்வோா் மட்டுமே பயன்படுத்தும் வகையில், ஆட்டோ, அவசர கால ஊா்திகள் வந்து செல்லும் வகையில் வழி ஏற்படுத்தப்பட்டது. அந்தப் பாதையில் இருந்த தடுப்புகளை ரயில்வே நிா்வாகத்தினா் வெள்ளிக்கிழமை அப்புறப்படுத்தினா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் டி.ஆறுமுகம், நிா்வாகிகள் கோ.மாதவன், ஆா்.அமா்நாத், அனைத்து குடியிருப்போா் நலச் சங்கப் பொதுச் செயலா் மு.மருதவாணன், பான்பரி சந்தை வியாபாரிகள் சங்க நிா்வாகி எஸ்.கே.பக்கிரான், ரயில் பயணிகள் நலச் சங்கத்தைச் சோ்ந்த குமாா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

அடைக்கப்பட்ட பாதையை முழுமையாகத் திறந்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தடையில்லாமல் அனுமதிக்க வேண்டும் என அனைத்து அமைப்புகளும் கட்சிகளும் வலியுறுத்தின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com