வாகன ஓட்டுநர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்

வாகன ஓட்டுநர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் கூறினார்.

வாகன ஓட்டுநர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் கூறினார்.

30-ஆவது சாலைப் பாதுகாப்பு வார விழா பிப்.4 முதல் 10-ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் கடலூர் நகர அரங்கில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரங்க நாடகம் செவ்வாய்க்கிழமை அரங்கேற்றப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார். இந்த நிகழ்வில், கருக்கை உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் சாலை பாதுகாப்பின் அவசியம் குறித்து நடித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

தொடர்ந்து, தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியில், காவல் கண்காணிப்பாளர் தலைக்கவசம் அணிந்து  பங்கேற்று வாகனம் ஓட்டிச் சென்றார். மேலும், 60 கி.மீ. வேகத்துக்கு மேல் வாகனம் இயக்கினால் பாதிப்பு ஏற்படும் என்பதை உணர்த்தும் வகையிலும், வீட்டில் தனக்காக குடும்பத்தார் காத்திருப்பர் என்பதை ஞாபகப்படுத்தும் வகையிலான விழிப்புணர்வு வில்லையை வாகனங்களின் முன்பகுதியில் ஒட்டினார். அதனைத் தொடர்ந்து, மஞ்சக்குப்பம் மைதானத்தில் ஆட்டோ ஓட்டுநர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் பேசியதாவது: 

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கடலூர் மாவட்டத்தில்தான் அதிக விபத்துகள் நடைபெறுகின்றன. வாகன ஓட்டுநர்கள் இதை உணர்ந்து பொறுப்புடன் செயல்பட வேண்டும். விபத்தால் நாம் பாதிக்கப்படும்போது நமது குடும்பமும் பாதிக்கப்படுகிறது. எனவே, விபத்தில் சிக்காமலும், விபத்தை ஏற்படுத்தாமலும் சாலை விதிகளை கடைப்பிடித்து வாகனங்களை இயக்க வேண்டும் என்றார் அவர். நிகழ்ச்சியில் கூடுதல் கண்காணிப்பாளர் இரா.வேதரத்தினம், துணைக் கண்காணிப்பாளர் சரவணன், புனித.வளனார் கல்லூரி செயலர் பீட்டர் ராஜேந்திரம், கடலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஏ.முக்கண்ணன், காவல் ஆய்வாளர்கள் த.கி.சரவணன் (புதுநகர்), செல்வம் (போக்குவரத்து பிரிவு) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com