சுடச்சுட

  

  தமிழக பல்கலைக்கழகங்களில் வள்ளலார் உயராய்வு மையங்கள் அமைக்க வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 13th February 2019 09:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழக பல்கலைக்கழகங்களில் வள்ளலார் உயராய்வு மையங்கள் அமைக்கப்பட  வேண்டும் என தமிழ்ச் தேசியப் பேரியக்க விழாவில் வலியுறுத்தப்பட்டது.  
  தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் "தமிழர் மறுமலர்ச்சி மூலவர் வள்ளலார் பெருவிழா'  சிதம்பரத்தில் அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு, அமைப்பின் பொதுச் செயலர் கி. வெங்கட்ராமன் தலைமை வகித்தார். அமைப்பின் தலைவர் பெ.மணியரசன் ஆற்றிய விழா நிறைவுப் பேருரை: வள்ளலாரின் சிந்தனைகள் மனித குலத்துக்கு தற்போது மிகவும் தேவை. மெய்யியல், மருத்துவம், மொழியியல் உள்ளிட்ட பல துறைகளில் அவர் ஆழ்ந்த அறிவுள்ளவராகத் திகழ்ந்தார். சிந்தனையாளராக மட்டுமின்றி, மிகச் சிறந்த கவிஞராக விளங்கினார். தமிழக பல்கலைக்கழகங்களில் வள்ளலார் உயராய்வு மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
  விழாவில், "வள்ளலார் வழி தமிழர் இறைநெறி' என்ற தலைப்பில் இறைநெறி இமயவனும், "வள்ளலார் வழி தமிழர் மருத்துவம்' என்ற தலைப்பில் மருத்துவர் தி.தெட்சிணாமூர்த்தியும் சிறப்புரையாற்றினர். விழாவில் தமிழ்ச் சான்றோர்களுக்கு விருது வழங்கப்பட்டது. வள்ளலாரின் நெறிகளை பரப்பி வரும் காட்டுமன்னார்கோவில் வள்ளலார் வழிபாட்டு மன்றத் தலைவர் சிவ.சிவ.ரங்கநாதனுக்கு "வள்ளலார் திருத்தொண்டர்' விருதும், திருக்குறள் ஒப்பித்தலில் சிறந்து விளங்கும் அரியலூர் மாணவி செல்வி கு.பத்மபிரியாவுக்கு "இளம் சாதனையாளர்' விருதும், சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சக்தி ரா.நடராஜனுக்கு "நாட்டியாஞ்சலி செம்மல்' விருதும் வழங்கப்பட்டது. பேரியக்க சிதம்பரம் நகரச் செயலர் ரா. எல்லாளன், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் வே.சுப்பிரமணியசிவா, ச.மணிவண்ணன் ஆகியோர் உரையாற்றினர். 
  தமிழர் தற்காப்புப் பயிற்சிப் பள்ளி மாணவர்கள் மல்லர் கம்பம், வீரவிளையாட்டுக் கலைகளை அரங்கேற்றினர். செல்வன் தி.ரா.அறன்  திருவருள்பா ஓதினார். மாணவி மோனிகா திருவருள்பா பாடலுக்கு பரதநாட்டியம் ஆடினார். தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலர் ஆ.குபேரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சிவ.அருளமுதன் நன்றி கூறினார். விழாவில், தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களில் வள்ளலார் உயராய்வு மையங்கள் அமைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai