சாரணர் இயக்கத்தினருக்கு பயிற்சி
By DIN | Published On : 14th February 2019 08:56 AM | Last Updated : 14th February 2019 08:56 AM | அ+அ அ- |

கடலூர் கல்வி மாவட்டத்தில் 12 முதல் 15 வயதுக்கு உள்பட்ட சாரண, சாரணீயர்களுக்கு 3-ஆம் நிலை பயிற்சி கடலூர் புனித வளனார் பள்ளியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சிக்கு கல்வி மாவட்ட சாரண, சாரணீய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆனந்தபவன் நாராயணன் தலைமை வகித்தார். முதன்மைக் கல்வி அலுவலர் கா.பழனிச்சாமி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பயிற்சியைத் தொடக்கி வைத்தார்.
மேலும், புதிய மாவட்டத் தலைவருக்கு அதற்கான கழுத்துப் பட்டையை அணிவித்தார் (படம்). பள்ளி முதல்வர் பி.அருள்நாதன் வாழ்த்திப் பேசினார்.
இந்தப் பயிற்சியில் 192 சாரணர்கள், 86 சாரணீயர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்களுக்கு இயக்க வரலாறு, மதிப்பிடுதல், முகாம் கலை, முடிச்சுகள், முதலுதவி, கூடாரம் அமைத்தல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
சாரண, சாரணீயர் இயக்கச் செயலர் ஜெ.செல்வநாதன், பயிற்சி ஆணையர்கள்
கே.ஜி.ராதாகிருஷ்ணன், கிரிஜா, அமைப்பு ஆணையர் முத்துக்குமரன், உஷாராணி ஆகியோர் இந்தப் பயிற்சிகளை அளித்தனர்.