தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சாராய வியாபாரி கைது
By DIN | Published On : 15th February 2019 08:36 AM | Last Updated : 15th February 2019 08:36 AM | அ+அ அ- |

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சாராய வியாபாரி வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
விருத்தாசலம் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் சுஜாதா தலைமையிலான காவலர்கள் கடந்த 26- ஆம் தேதி திட்டகுடி வட்டம், கொரக்கவாடி- வடகரபூண்டி காட்டுப்பாதை ஓடை அருகே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது, அந்தப் பகுதியில் 10 கேன்களில் மொத்தம் 300 லிட்டர் எரிசாராயம் வைத்திருந்ததாக கொரக்கவாடியைச் சேர்ந்த த.ஜெயபாலை (43) கைது செய்தனர்.
இவர் மீதான விசாரணையில், விருத்தாசலம் மதுவிலக்கு காவல் நிலையத்தில் 3 வழக்குகள், ராமநத்தம் காவல் நிலையத்தில் 2 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, அவரது குற்றச் செய்கையைக் கட்டுப்படுத்தும் வகையில், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் பரிந்துரைத்தார்.
அதன் பேரில், ஜெயபாலை ஓராண்டுக்கு சிறையில் அடைக்கும் வகையில், தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் வழங்கினார். இதையடுத்து, ஜெயபால் கடலூர் மத்திய சிறையில்
அடைக்கப்பட்டார்.