2 லட்சம் விவசாயிகளுக்கு ஊக்க நிதி வழங்க இலக்கு: மாவட்ட ஆட்சியர்

கடலூர் மாவட்டத்தில் 2 லட்சம் விவசாயிகளுக்கு மத்திய அரசின் ரூ.6 ஆயிரம் ஊக்க நிதி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக

கடலூர் மாவட்டத்தில் 2 லட்சம் விவசாயிகளுக்கு மத்திய அரசின் ரூ.6 ஆயிரம் ஊக்க நிதி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் கூறினார்.
 பிரதம மந்திரி- கிசான் சம்மான் (விவசாயிகள் ஊக்க நிதி) திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு முதல் தவணை நிதி வழங்கும் நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திரமோடி உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தார். இதனை முன்னிட்டு விவசாயிகளுடன்  
பிரதமர் காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடும் நிகழ்ச்சி  கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதையடுத்து கடலூர் மாவட்டத்தில் இந்தத் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தொடக்கி வைத்து 150 விவசாயிகளுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் செலுத்தப்பட்டதற்கான சான்றுகளை வழங்கினார் .
 பின்னர் ஆட்சியர் கூறியதாவது: இந்தத் திட்டத்தில் இதுவரை கணக்கெடுப்பு செய்யப்பட்ட விவசாயிகளின் விவரங்களை கணினியில் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள், வட்டாட்சியர்கள் மூலம் வலைதளத்தில் பதிவேற்றம் செய்து முதல் தவணை நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் தகுதியான அனைத்து விவசாயிகளையும் சேர்க்கும் விதமாக திங்கள்கிழமை (பிப். 25) முதல் 3 நாள்களுக்கு கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர், சார்-ஆட்சியர் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் பேர் இந்தத் திட்டத்தில் பயனடைய வேண்டும் என்பதே இலக்காகும் என்றார் ஆட்சியர்.
 அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வேளாண்மை மற்றும் இதர சார்பு துறைகளால் அமைக்கப்பட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் சார்ந்த கருத்து காட்சியை ஆட்சியர் பார்வையிட்டார். தமிழ்நாடு அரசின் கூட்டு பண்ணைய திட்டத்தின் மூலம் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறையால் அமைக்கப்பட்ட 85 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.3 கோடி மானிய உதவித் தொகையில் ரோட்டா வேட்டர், பவர் டில்லர், நெல் நடவு இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு பண்ணைக் கருவிகளை ஆட்சியர் வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com