முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
பொதுத் தேர்வு: பறக்கும்படை, அறை கண்காணிப்பாளர்களுக்கு பயிற்சி
By DIN | Published On : 28th February 2019 08:47 AM | Last Updated : 28th February 2019 08:47 AM | அ+அ அ- |

கடலூர் மாவட்டத்தில் பொதுத் தேர்வையொட்டி, பறக்கும்படை, அறை கண்காணிப்பாளர்களுக்கான பயிற்சி முகாம் கடலூரில் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை (மார்ச் 1) முதல் அரசு பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ளன. இதையொட்டி, தேர்வு பறக்கும் படை, அறை கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கா.பழனிசாமி தலைமையில், இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி தேர்வுத் துறை) சேதுராமவர்மா சிறப்புரையாற்றினார். இதில், 310 பறக்கும் படை, நிலைப்படையைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. மாலை கடலூர், சிதம்பரம் கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த அறைக் கண்காணிப்பாளர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.
இதேபோல, வடலூரில் வடலூர், விருத்தாசலம் கல்வி மாவட்ட அளவிலான அறை கண்காணிப்பாளர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. இதில், மாவட்ட கல்வி அலுவலர்கள் பெ.சுந்தரமூர்த்தி, ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
கடலூர் மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்வை 218 பள்ளிகளில் 14,345 மாணவர்கள், 16,285 மாணவிகள் என மொத்தம் 30,630 பேர் எழுதுகின்றனர். மார்ச் 6 -ஆம் தேதி தொடங்கும் பிளஸ் 1 தேர்வை 231 பள்ளிகளில் 14,038 மாணவர்கள், 16,456 மாணவிகள் என மொத்தம் 30,494 பேர் எழுதுகின்றனர்.
பிளஸ் 2 தேர்வை எழுதும் மாணவர்களுக்காக 104 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தனித் தேர்வர்களுக்கு 5 மையங்கள் அமைக்கப்பட்டு 1,251 பேர் எழுதுகின்றனர். 9 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, ஆயுதம் தாங்கிய காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல, வினாத்தாள்களைக் கொண்டு செல்ல 22 வழித்தட அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வுப் பணிகளைக் கண்காணிக்க முதன்மைக் கண்காணிப்பாளர்கள் 104 பேர், துறை அலுவலர்கள்கள் 104 பேர், வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் 16 பேர், அறை கண்காணிப்பாளர்கள் 1,678 பேர், பறக்கும் படை, நிலைப்படையினர் 310 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல, 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 14 -ஆம் தேதி தொடங்கி 29- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தேர்வை 432 பள்ளிகளிலிருந்து 18,463 மாணவர்கள், 17,732 மாணவிகள் என மொத்தம் 36,195 பேர் எழுதுகின்றனர். இந்தத் தேர்வு 132 மையங்களில் நடைபெறுகிறது.