சுடச்சுட

  

  எனதிரிமங்கலம் மணல் குவாரி முற்றுகை: எம்எல்ஏ உள்பட 340 பேர் கைது

  By DIN  |   Published on : 01st January 2019 05:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பண்ருட்டி அருகேயுள்ள எனதிரிமங்கலத்தில் மணல் குவாரியை முற்றுகையிட்ட திமுக எம்எல்ஏ உள்பட  340 பேர் திங்கள்கிழமை கைதுசெய்யப்பட்டனர். 
  பண்ருட்டி வட்டம், எனதிரிமங்கலம் கிராமத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் அரசு மணல் குவாரி அமைக்கப்பட்டது. இந்த குவாரியால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர், பாசனத் தேவைக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் எனக்கூறி, எனதிரிமங்கலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
  இதையடுத்து, குவாரியில் மணல் அள்ளுவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த சில நாள்களாக போலீஸ் பாதுகாப்புடன் மணல் அள்ளும் பணி மீண்டும் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக கடந்த புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட 500 பேரை போலீஸார் கைது செய்தனர். இருப்பினும், குவாரியில் போலீஸ் பாதுகாப்புடன் தொடர்ந்து மணல் அள்ளப்படுகிறது.
  இந்த நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்னர் பண்ருட்டியில் திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், மணல் குவாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, எனதிரிமங்கலம் கிராமத்தில் கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலர் சி.வெ.கணேசன் எம்எல்ஏ தலைமையில் திங்கள்கிழமை காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், தேமுதிக முன்னாள் எம்எல்ஏ சிவக்கொழுந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எம்.சேகர், விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் எஸ்.துரைராஜ், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் எம்.ஆர்.ராதாகிருஷ்ணன், தமாகா சார்பில்  நெடுஞ்செழியன் மற்றும் விசிக, மதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினர், கிராம மக்கள் திரளானோர் பங்கேற்றனர்.
  பின்னர், இவர்கள் அனைவரும் மணல் குவாரியை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். குவாரி அருகே 100-க்கும் மேற்பட்ட போலீஸார் தடுப்புக் கட்டை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அங்கு போலீஸாருக்கும், போராட்டக் குழுவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஏடிஎஸ்பி ரா.வேதரத்தினம், சிதம்பரம் டிஎஸ்பி பாண்டியன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, காவலர்கள் சிலர் தடியால் பெண்களை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.  இதையடுத்து, போராட்டக் குழுவினர் குவாரி எதிரே அமர்ந்து முழக்கமிட்டனர். அவர்களிடம் சார்-ஆட்சியர் (பொ) வெற்றிவேல் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, சி.வெ.கணேசன் எம்எல்ஏ, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் எம்.சேகர் ஆகியோர் செல்லிடப்பேசி மூலம் மாவட்ட 
  ஆட்சியரை தொடர்புகொண்டு பேசினர். குவாரியில் மணல் அள்ளுவதை பொங்கல் பண்டிகை வரை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதற்கு  வாய்ப்பில்லை என அரசு தரப்பில் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 110 பெண்கள் உள்ளிட்ட 340 பேரை புதுப்பேட்டை போலீஸார் கைது செய்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai