சுடச்சுட

  

  கடலூரில் பிஎஸ்என்எல் சார்பில் அதிவேக இணைய வசதி தொடக்கம்

  By DIN  |   Published on : 01st January 2019 05:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இணைய பயன்பாட்டுக்கு கூடுதல் வேகம் அளிக்கும் கண்ணாடி இழை வசதியை கடலூர் மாவட்டத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் திங்கள்கிழமை தொடங்கியது. 
  கடலூர் மாவட்டத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் சுமார் 27,500 பேருக்கு கம்பி மூலமாக இணையதள வசதி அளித்துள்ளது. 10 எம்பிபிஎஸ் வேகம் கொண்ட இந்த வசதியை, கூடுதல் வேகத்துடன் அதிகரிக்கும் பணியில் நிர்வாகம் ஈடுபட்டு வந்தது. இதில், கம்பி வழி தொடர்புக்கு பதிலாக கண்ணாடி இழை வயர்களை மாற்றி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது. கடலூர் நகரப் பகுதியில் இந்தப் பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து, இதை  இயக்கி வைக்கும் நிகழ்ச்சி கடலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.
  கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, கடலூர் பொதுமேலாளர் ஜெயக்குமார் ஜெயவேலு தலைமை வகித்து அதிவேக இணையதள வசதியை தொடக்கி வைத்தார். 
  பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
  கண்ணாடி இழை வயர்கள் மூலமாக வீடுகளுக்கே நேரடியாக இணைய சேவை வழங்கப்படுகிறது. இதனால், 10 எம்பிபிஎஸ் வேகம் தற்போது 100 எம்பிபிஎஸ் வேகமாக அதிகரித்துள்ளது. இது, செல்லிடப்பேசிகளில் பயன்படுத்தப்படும் 4ஜி வேகத்தை விட மிக அதிகமானதாகும். மாதம் ரூ.777 செலுத்தும் திட்டத்தில் 500 ஜி.பி.யானது 50 எம்பிபிஎஸ் வேகத்திலும், ரூ.1,277 திட்டத்தில் 750 ஜிபி வரை 100 எம்பிபிஎஸ் வேகத்திலும் கிடைக்கும். மேலும், அளவில்லா இலவச அழைப்புகளையும் இரண்டு திட்டங்களிலும் பெற்றுக் கொள்ளலாம்.
  இந்த இணைப்புகளை தனியார் கேபிள் டிவி இயக்குபவர்கள் மூலமாகவும் வழங்க திட்டமிட்டுள்ளோம். இதற்கான அனைத்து ஆயத்தப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. கடலூரைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் இந்த த்திட்டம் விரிவுப்படுத்தப் படும் என்றார் அவர்.
  மேலும், சிறப்புக் கட்டண சலுகைகளை விழாக் கால நாள்களிலும் வாடிக்கையாளர்கள் உபயோகிக்க ஏதுவாக, "ப்ளாக் அவுட் டேஸ்' என்ற தடையை நீக்கியுள்ளோம். எனவே, விழாக் காலங்களிலும் வாடிக்கையாளர்கள் தங்களது வழக்கமான கட்டணத்திலேயே அனைத்து சேவைகளையும் பெறலாம் என்றார்.
  நிகழ்ச்சியில், துணைப் பொது மேலாளர்கள் கே.சாந்தா, ஆர்.மதுரை, எம்.குப்புசாமி, பொறியாளர் சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai