சுடச்சுட

  

  தாலிக்கு தங்கம் வழங்கும் திட்ட பயனாளிகளில் சிலர் கடலூரில் சமூக நலத் துறை அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். 
  ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு நிதியுதவி, தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின்கீழ் ஞாயிற்றுக்கிழமை கடலூர் நகர அரங்கில் 1,920 பேருக்கும், விருத்தாசலத்தில் 1,283 பயனாளிகளுக்கும் நிதி உதவி, 8 கிராம் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைச்சர் எம்.சி.சம்பத் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
  இந்த நிகழ்ச்சியில் நலத் திட்ட உதவி பெறுபவர்களுக்காக அந்தந்த வட்டார விரிவாக்க அலுவலர்கள் மூலமாக டோக்கன் வழங்கப்பட்டது. ஆனால், அவர்களில் சிலர் விழா நடைபெறும் நேரத்தில் வராததால் அவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படவில்லையாம். மேலும், மறுநாள் கடலூரில் உள்ள சமூக நலத் துறை அலுவலகத்தில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டதாம். 
  அதன்படி, பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த சுமார் 50 பேர் திங்கள்கிழமை சமூக நலத் துறை அலுவலர் அலுவலகத்தில் குவிந்தனர். அவர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட டோக்கனை காண்பித்து தங்கம், நிதி உதவி வழங்க வேண்டுமென கோரினர். ஆனால், அங்கிருந்த அலுவலர்கள் உரிய பதில் அளிக்காததால் அவர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். 
  நீண்ட நேரத்துக்குப் பின்னர் அலுவலர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு திருமண நிதி உதவித் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 2 விரிவாக்க அலுவலர்களை ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
  இதுகுறித்து, மாவட்ட சமூக நல அலுவலர் கோ.அன்பழகி கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நிதி உதவி பெறுவதற்கு டோக்கன் வழங்கியவர்களில் 600 பேர் பங்கேற்கவில்லை. அவர்களுக்கு மற்றொரு நாளில் முறையாக அறிவித்தே வழங்கப்படும். தனித் தனியாக வழங்கப்பட மாட்டாது என்பதை தெரிவித்து விட்டோம். டோக்கன் வழங்கிய அனைவருக்கும் நிதி உதவி வழங்கப்படும் என்றார்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai