சுடச்சுட

  

  புத்தாண்டை விபத்து குறைப்பு ஆண்டாக மாற்றுவோம்: பொதுமக்களுக்கு எஸ்பி அழைப்பு

  By DIN  |   Published on : 01st January 2019 04:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  2019-ஆம் ஆண்டை விபத்து குறைப்பு ஆண்டாக மாற்றுவோம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
   புத்தாண்டை முன்னிட்டு கடலூரில் அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: "2019-ஆம் ஆண்டை விபத்து குறைப்பு ஆண்டாக மாற்றுவோம்' என்ற இலக்கை காவல் துறை எடுத்துள்ளது. 2018-ஆம் ஆண்டில் கடலூர் மாவட்டம் முழுவதும்  3,463 விபத்துகள் நடைபெற்றன. இதில் சுமார் 450 பேர் இறந்துள்ளனர். 2017-ஆம் ஆண்டை விட விபத்துகள் 20 சதவீதம் வரை குறைந்துள்ளபோதிலும், விபத்துகளை மேலும் குறைக்க முக்கியத்துவம் அளிக்கிறோம். பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை மதித்து நடக்க வேண்டும்.
   குற்ற வழக்குகளில் 60 நாள்களுக்குள் விசாரணையை முடித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற இலக்கை எட்டிட முடிவெடுத்துள்ளோம். கடந்த ஆண்டில் 350 குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில், 290 வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிந்துள்ளோம். மாவட்டத்தில் சிறிய பிரச்னைக்கெல்லாம் தற்கொலை செய்துக்கொள்ளும் எண்ணம் அதிகமாக உள்ளது. மாவட்டத்தில் 863 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதுதொடர்பாக சமூக நலத் துறையுடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். அதேபோல, சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்தும் போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டி உள்ளது. 
   52 கொலைகள் நடந்ததில் பெரும்பாலானவற்றில் துப்பு துலங்கியுள்ளது. போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக, கடந்த ஆண்டை விட அதிகமாக தற்போது 8,325 வழக்குகள் பதியப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 2017-ஆம் ஆண்டு 66 பேர் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது 79 பேரை கைது செய்துள்ளோம். மணல் கொள்ளை வழக்கில் 245 லாரிகள், 156 டிராக்டர்கள், 13 பொக்லைன் இயந்திரங்கள், 1,257 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்துள்ளோம். 
  இதில், 2017-ஆம் ஆண்டில் 1,100 வழக்குகள் பதிவாகியிருந்தது தற்போது 2,170 வழக்குகளாக பதிவாகியுள்ளன. 6 ஆயிரம் பிடியாணைகளை நிறைவேற்றியுள்ளோம். மாவட்டத்தில் 3 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள்  பொருத்தப்பட்டுள்ளன என்றார் அவர்.
  மேலும், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட  கடற்கரையோர கிராமங்களில் சட்டத்துக்குப் புறம்பான செயல்களை கட்டுப்படுத்தவும் 
  ரோந்துப் பணியை தீவிரப்படுத்த உள்ளோம் என்றார் எஸ்பி.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai