சுடச்சுட

  

  நெகிழிக்குத் தடை: விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 02nd January 2019 11:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நெகிழிப் பொருள்கள் மீதான தடை குறித்து பொதுமக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தினர். 
  சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் நெகிழிப் (பிளாஸ்டிக்) பொருள்களை பயன்படுத்த தடை விதித்து தமிழக அரசால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உத்தரவிடப்பட்டது. இந்த தடை உத்தரவு செவ்வாய்க்கிழமை (ஜன.1) முதல் அமலுக்கு வந்தது. முன்னதாக இதுதொடர்பாக கடலூர் மாவட்ட நிர்வாகம் அரசின் பல்வேறு துறையினருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதோடு, வியாபாரிகளிடமும் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தியது. கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட வேண்டுமென வியாபாரிகளில் ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இந்த தடை உத்தரவு செவ்வாய்க்கிழமை அமலுக்கு வந்தது.
  இதனால், கடைகளில் நெகிழிப் பொருள்களை வியாபாரிகள் பொதுமக்களுக்கு வழங்கவில்லை. பை இல்லாமல் வந்தவர்களிடம், கண்டிப்பாக துணிப்பை அல்லது மாற்று ஏற்பாடு செய்துகொள்ள வேண்டுமென வலியுறுத்தினர். சில கடைகளில் வியாபாரிகள் தங்களிடமுள்ள எஞ்சிய நெகிழிப் பைகளில் பொதுமக்களுக்கு பொருள்களை வழங்கியதோடு, இந்த நெகிழி காலியானவுடன் வழங்க முடியாது எனவே, அடுத்த முறை கண்டிப்பாக மாற்று ஏற்பாட்டுடன் வருமாறு வலியுறுத்தினர்.
  இதனால், செவ்வாய்க்கிழமை பொருள்கள் வாங்குவதற்காக கடைகளுக்குச் சென்ற பொதுமக்களுக்கு புதிய அனுபவம் கிடைத்தது. எனினும், நெகிழிப் பொருள்கள் தாராளமாக பயன்பாட்டில் உள்ளதால் இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி, விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
  இதுகுறித்து கடலூர் மாவட்ட உணவுப் பொருள் வியாபாரிகள் கூட்டமைப்பு செயலர் நா.செல்லப்பாண்டியன் கூறியதாவது: நெகிழிப் பொருள்கள் மீதான தடையை வரவேற்கிறோம். ஆனால், எங்களிடம் வரும் வாடிக்கையாளர்கள் வேண்டுமென கேட்கும்போது எங்களால் மறுக்க முடியவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் இதுதொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 
  குறிப்பாக நகரம், கிராமப்புற பகுதிகளில் ஒலிபெருக்கிகள் மூலமாக தொடர்ச்சியாக குறிப்பிட்ட காலம் வரை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
  அதே நேரத்தில் மாற்றுப் பொருள்களை கண்டறிவதிலும், அதனை வியாபாரிகளிடம் கொண்டுச் சேர்ப்பதிலும் போதுமான முன்னேற்றம் இல்லை. காகித பை தயாரிப்பு போன்றவற்றில் மகளிர் சுய உதவிக் குழுவினரை ஈடுபடுத்தி அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மானியம் வழங்கி ஊக்கப்படுத்தலாம் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai