சுடச்சுட

  

  பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை

  By DIN  |   Published on : 02nd January 2019 11:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அனைத்துப் பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கோரிக்கை விடுத்தார்.
  இதுகுறித்து அவர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: அனைவருக்கும் கல்வித் திட்டம், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் அனைத்து வகை அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உடல்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, தோட்டக்கலை உள்ளிட்ட பல்வேறு பாடப் பிரிவுகளுக்கு 16,549 பகுதிநேர சிறப்பாசிரியர்கள் ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு பணி நியமனம் செய்யப்பட்டனர். தற்போது சுமார் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களே பணிபுரிகின்றனர். இவர்கள் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் நிலையில் ரூ.2,700 மட்டுமே ஊதிய உயர்வாக வழங்கப்பட்டுள்ளது. மிகக் குறைந்த ஊதியமாக ரூ.7,700 மட்டுமே பெற்று வருகின்றனர். 
  அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது அகவிலைப்படி உள்ளிட்ட ஊதிய உயர்வுகள் வழங்கப்படும் நிலையில், தொகுப்பூதியத்தில் உள்ளவர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. இதனால் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றனர். 
  தமிழக அரசு 7-ஆவது ஊதியக்குழு தொடர்பாக அரசாணை வெளியிட்டும் இதுவரைஅரசின் திட்ட வேலையில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு 30 விழுக்காடு ஊதிய உயர்வுகூட வழங்கப்படவில்லை. எனவே, இதுபோன்ற நடைமுறை சிக்கல்களை தவிர்த்திட இந்திய அரசியலமைப்புச் சட்டம் 141-இன்படி சம வேலைக்கு சம ஊதியத்தை பகுதிநேர ஆசிரியர்களுக்கு அமல்படுத்த ஆணையிட வேண்டும்.
  பணி நிரந்தரம் செய்யும் வரை இடைக்கால நிவாரணமாக மத்திய அரசின் குறைந்தபட்ச ஊதியமான ரூ.18 ஆயிரத்தை, தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பகுதி நேரஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். எனவே, தமிழக அரசு 12,000 குடும்பங்களின் எதிர்கால நலனை கருதி வருகிற சட்டப் பேரவைக் கூட்டத் தொடரிலே பகுதிநேர ஆசிரியர்களை சிறப்பாசிரியர்களாக பணி நிரந்தரம் செய்வதற்கான அறிவிப்பை அரசாணையாக வெளியிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai