ஆங்கிலப் புத்தாண்டு: வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு பூஜை

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்தில்  வழிபாட்டுத் தலங்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு  பூஜை  நடைபெற்றது.

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்தில்  வழிபாட்டுத் தலங்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு  பூஜை  நடைபெற்றது.
2018-ஆம் ஆண்டு நிறைவடைந்து, 2019 புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, கடலூர் மாவட்டம் முழுவதும் திங்கள்கிழமை நள்ளிரவு முக்கியப் பகுதிகளில் இளைஞர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 
கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் பொதுமக்கள் அதிகமானோர் திரண்டு புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். புத்தாண்டையொட்டி, அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்புப் பிரார்த்தனை நடை
பெற்றது. 
இதேபோல, கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பொதுமக்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். 
கடலூர் திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் கோயில், திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயில், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில், திட்டக்குடி தேவநாதசுவாமி கோயில் உள்பட மாவட்டத்திலுள்ள அனைத்து முக்கியக் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். திரையரங்கு, பூங்கா உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
நெய்வேலி: ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கோ-பூஜை நடைபெற்றது. மூலவர் வீரட்டானேஸ்வரர், பெரியநாயகி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். 
இதேபோல, பண்ருட்டி வரதராஜப் பெருமாள் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 
திருவதிகை சரநாராயணப் பெருமாள் கோயிலில் மூலவர் முத்தங்கி சேவையிலும், உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்திலும் காட்சியளித்தனர். திருவதிகை அரங்கநாதர் பெருமாள், வெங்கடாம்பேட்டை வேணுகோபால சுவாமி கோயில்களில் பள்ளிகொண்ட ராமர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.
பண்ருட்டியை அடுத்துள்ள பணிக்கன்குப்பம் புனித விண்ணேற்பு அன்னை பேராலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு திங்கள்கிழமை இரவு 11.30 மணிக்கு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பங்குத் தந்தை மரிய ஆனந்தராஜ் தலைமையில் கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி திருப்பலியில் ஈடுபட்டனர். அண்ணாகிராமம் வானவில் தேவாலயத்தில் கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டு ஊர்வலம் நடத்தினர். இதேபோல, இதர தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
சிதம்பரம்: ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, சிதம்பரம் கீழவீதியில் அமைந்துள்ள வீரசக்தி ஆஞ்சநேயர் கோயிலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com