காட்டுமன்னார்கோவில் பகுதியில் தொடரும் மணல் திருட்டு

காட்டுமன்னார்கோவில் கொள்ளிடக் கரையோர பகுதிகளில் மணல் திருட்டு தொடர்வதாக புகார் எழுந்துள்ளது. 

காட்டுமன்னார்கோவில் கொள்ளிடக் கரையோர பகுதிகளில் மணல் திருட்டு தொடர்வதாக புகார் எழுந்துள்ளது. 
 காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள கொள்ளிடக்கரையோர கிராமங்களான கஞ்சங்கொல்லை, சிறுகாட்டூர், ஆச்சாள்புரம், எய்யலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் மணல் கடத்தல் நடைபெறுகிறது. 
இந்தப் பகுதியில் கடந்த சில மாதங்களாக மணல் திருட்டு முற்றிலும் தடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கஞ்சங்கொல்லை, நேருநகர், கீழத்தெரு ஆகிய பகுதிகளை சேர்ந்த சிலர் இரு சக்கர வாகனங்களில் மணல் மூட்டைகளை அரியலூர் மாவட்டத்துக்கு கடத்திச் சென்று, மூட்டை ஒன்றுக்கு ரூ.70 வரை விலைபேசி விற்பனை செய்வதாகவும், போலீஸாரின் ஒத்துழைப்புடன் இந்த மணல் கடத்தல் நடப்பதாகவும் அந்தப் பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். 
மணல் கடத்தலில் ஈடுபடுவோர், அதற்கு துணைபோகும் காவல் துறையினர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்தும் சில காவலர்கள் பணத்துக்கு ஆசைப்பட்டு மணல் கடத்தும் கும்பலுக்கு துணைபோவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது: கீழணை பாலம் வழியாக  கஞ்சங்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த சிலர் டிராக்டர்  மூலம் மணல் கடத்தலில் ஈடுபடுகின்றனர். 
மேலும், காட்டுமன்னார்கோவில் நகர் பகுதியில் சந்தைதோப்பு, பெரியகுளம், இலங்கை அகதிகள் முகாம், திரெளபதி அம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சிலர் தொழிலாளர்களிடம் தடை செய்யப்பட்ட லாட்டரிகளை விற்பனை செய்தும் வருகின்றனர். 
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com