கீழணை பாலத்தில் தற்காலிகமாக பேருந்துகள் இயக்கப்படுமா?

பண்டிகை காலத்தை முன்னிட்டு கீழணை பாலத்தில் தற்காலிகமாக பேருந்துகள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். 

பண்டிகை காலத்தை முன்னிட்டு கீழணை பாலத்தில் தற்காலிகமாக பேருந்துகள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். 
காட்டுமன்னார்கோவில் அருகே கீழணை உள்ளது. இந்த அணை தஞ்சை மாவட்டத்தில் அமைந்திருந்தாலும், கடலூர் பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் கல்லணையை  வந்தடைந்து, அதன் ஒரு பகுதி நீர் கொள்ளிடம் ஆற்றின் வழியாக வந்து இந்த அணையில் தேக்கப்படுகிறது. கீழணையில் தேங்கும் தண்ணீரால் கடலூர், நாகை, தஞ்சை மாவட்டங்களை சேர்ந்த சுமார் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 903 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 
இந்த அணையின் மேல் பகுதி மூலம் தஞ்சை, நாகை, அரியலூர், கடலூர், நாகை, திருவாரூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயங்கப்பட்டு வந்தன. கடந்த 2011-ஆம் ஆண்டு கீழணை பாலத்தின் மேல்பகுதியில் விரிசல் ஏற்பட்டது. இதனால், அணையின் பாதுகாப்பு கருதி பேருந்துகள் இயக்குவது நிறுத்தப்பட்டது. பின்னர் பாலம் சீரமைக்கப்பட்டு 2013-ஆம் ஆண்டில் போக்குவரத்து தொடங்கியது. ஆனால், மீண்டும் பாலத்தில் விரிசல் ஏற்பட்டதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன்பிறகு பாலம் முழுமையாக சீரமைக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கி நடைபெற்று வந்தது. 
இந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முன்னறிவிப்பின்றி இந்தப் பாலத்தில் பேருந்து போக்குவரத்து மீண்டும் நிறுத்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாலத்தை காரணம் காட்டி ஆட்டோ ஓட்டுநர்கள் அந்தப் பகுதியைக் கடக்க கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் கூறப்படுகிறது. 
இதனால், ஏழை மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடலூர், தஞ்சை மாவட்ட ஆட்சியர்கள் வருகிற 20-ஆம் தேதி வரை கீழணை பாலத்தில் மீண்டும் பேருந்துகளை இயங்க அனுமதி வழங்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com