தடுக்கப்படும் சாலைப் பணி: ஆட்சியரிடம் மனு

சாலைப் பணி தனி நபரால் தடுக்கப்படுவது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தென்னம்பாக்கம் கிராம மக்கள் புகார் மனு அளித்தனர். 

சாலைப் பணி தனி நபரால் தடுக்கப்படுவது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தென்னம்பாக்கம் கிராம மக்கள் புகார் மனு அளித்தனர். 
கடலூர் வட்டம், தென்னம்பாக்கத்தைச் சேர்ந்த எஸ்.செல்வம், ஸ்ரீராமச்சந்திரராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலர் ஜே.ராஜேஷ்கண்ணன், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.தட்சணாமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர் எத்திராஜ் மற்றும் அந்த கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: 
கடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட தென்னம்பாக்கம் ஊராட்சி, தென்னம்பாக்கம் காலனியில் சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அருகே உள்ள நகரப் பகுதிக்குச் செல்ல சாலை வசதி வேண்டி 2016-ஆம் ஆண்டில் ஆட்சியரிடம் விண்ணப்பித்தோம். அதன்படி, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு சாலை அமைக்க முற்படும்போது தனி நபரின் தலையீட்டால் அந்தப் பணி தடுக்கப்பட்டது. 
பின்னர், 2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கிராம நிர்வாக அலுவலரால் ஆய்வு செய்யப்பட்டு, அரசுப் புறம்போக்கு நிலம் வழியாகச் சாலை அமைக்கலாம் என வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு சான்று வழங்கப்பட்டது. இதையடுத்து, 
வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் ஆய்வுசெய்து, சாலை அமைக்க முற்படும்போது, அந்த இடத்தை ஆக்கிரமித்துள்ள தனி நபரின் தலையீட்டால் அந்தப் பணி மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது. 
கடந்த 2 கிராம சபைக் கூட்டங்களிலும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு சாலை வசதி அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, ஆக்கிரமிப்பு அகற்றுதல் தொடர்பாக வட்டாட்சியரால் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, சாலையை அளந்து பாதை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் சில அதிகாரிகளின் துணையோடு சாலைப் பணி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து, சாலை அமைத்துத் தர வேண்டும் என்று அந்த மனுவில் கோரியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com