மணிலாவில் தண்டு அழுகல் நோய் பாதிப்பு

அண்ணாகிராமம் பகுதியில் மணிலா பயிர்கள் தண்டு அழுகல், வேர் அழுகல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

அண்ணாகிராமம் பகுதியில் மணிலா பயிர்கள் தண்டு அழுகல், வேர் அழுகல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
அண்ணாகிராமம் ஒன்றியத்துக்கு உள்பட்ட எனதிரிமங்கலம், கரும்பூர், பைத்தாம்பாடி, ஒறையூர் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் விவசாயிகள் கார்த்திகை பட்ட மணிலா சாகுபடி செய்துள்ளனர். கடந்த சில வாரங்களில் அவ்வப்போது பெய்த மழையால் மணிலா செடிகள் செழித்து வளர்ந்தன. ஆனால், இந்தச் செடிகளில் தற்போது நோய்களின் தாக்குதல் தென்படுகிறது. செடிகள் அடிப்பாகத்துடன் காய்ந்தும், பூச்சிகளால் இலைகள் பாதிக்கப்பட்டும் காணப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து எனதிரிமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி ஜெயந்தி கூறியதாவது: விதை மணிலா (40 கிலோ கொண்ட) மூட்டையை  ரூ.3,500-க்கு வாங்கி வந்து, கையால் தோல் உரித்து விதைப்பு செய்தேன். விதைப்புக்கு ஒரு ஏக்கருக்கு 3 மூட்டைகள் தேவை. விதை மணிலாவை வாங்கும்போது நோய் தாக்குதல் ஏற்படாது எனக் கூறினர். மணிலா செடிகளில் தற்போது பூக்கள் பூத்துள்ளன. ஆனால், ஒரு பாத்தியில் 10-க்கும் மேற்பட்ட செடிகள் தண்டு அழுகல் நோயால் பாதிக்கப்பட்டு காய்ந்து காணப்படுகின்றன. வேர் அழுகல் நோயும் பரவலாகக் காணப்படுகிறது. மேலும், பச்சை புழுக்களின் தாக்குதலால் இலைகள் சேதமடைந்து மணிலா செடிகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. 
இதனால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நோய் பாதித்த மணிலா வயல்களைப் பார்வையிடவேளாண் அதிகாரிகள் வரவில்லை. தேவையான ஆலோசனையும் வழங்கவில்லை. நோயால் பாதிக்கப்பட்ட செடிகளை பறித்து மருந்துக் கடையில் காண்பித்து மருந்து வாங்கி தெளித்து வருகிறோம் என்று கவலையுடன் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com