சுடச்சுட

  

  கடலூர் நகரில் அடிப்படை வசதிகளைச் செய்து தரக் கோரி, குடியிருப்போர் நலச் சங்கத்தினர் கடலூர் தலைமை அஞ்சல் நிலையம் அருகே புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  ஆர்ப்பாட்டத்துக்கு சங்கக் கூட்டமைப்புத் தலைவர் பி.வெங்கடேசன் தலைமை வகித்தார். இணைப் பொதுச் செயலர் 
  டி.புருஷோத்தமன், துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலர் மு.மருதவாணன், நிர்வாகிகள் மாயவேல், மணிவண்ணன், பாலுபச்சையப்பன், ரவிச்சந்திரன், மனோகரன், முனுசாமி, கண்ணன், நடராயன், செல்வராஜ், வீராசாமி, ரமணி, கண்ணபிரான் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
  ஆர்ப்பாட்டத்தின் போது, கடலூர் நகரிலுள்ள கெடிலம் ஆற்றின் கரையோரச் சாலை, கம்மியம்பேட்டை சாலை உள்ளிட்டவை போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இந்தச் சாலைகளைச் சீரமைக்க வேண்டும். நேதாஜி சாலை, லாரன்ஸ் சாலை, வண்டிப்பாளையம் சந்திப்பு, சிதம்பரம் சாலையிலுள்ள பேருந்து நிலையச் சந்திப்பு, வேலைவாய்ப்பு அலுவலகம், செம்மண்டலம் சந்திப்பு, சாவடி சந்திப்பு, ஆல்பேட்டை சந்திப்பு, மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு சந்திப்பு ஆகிய இடங்களில் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளதால், விபத்துகள் அதிகளவில் நிகழ்கின்றன. இதற்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
  சாலைகளிலும், நகரிலும் எரியாமல் உள்ள விளக்குகளைச் சரி செய்ய வேண்டும். சுகாதார சீர்க்கேட்டை ஏற்படுத்தும் கம்மியம்பேட்டை குப்பைக் கிடங்கை அம்ரூத் திட்டத்தின்கீழ், உடனடியாக அகற்ற வேண்டும். கொசு உற்பத்திக்குக் காரணமான கழிவுநீர் கால்வாய்களைச் சீரமைத்து, கழிவுநீர் தடையில்லாமல் செல்ல வழிவகை செய்ய வேண்டும்.
  புதை சாக்கடைத் திட்டத்தில் கழிவுநீர் தடையின்றி வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு, தனியார் ரத்த வங்கிகளில் சேமித்து வைக்கப்பட்ட ரத்தங்களை ஹெச்ஐவி பாதிப்புள்ளதா என்று மீண்டும் பரிசோதிக்க மாவட்ட நிர்வாகமும், மருத்துவ துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சங்கப் பொருளாளர் கே.பி.சுகுமாறன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai