பாதையை அடைக்கும் ரயில்வே நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

பாதையை அடைக்கும் ரயில்வே நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

பாதையை அடைக்கும் ரயில்வே நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
கடலூர் ரயில் நிலையமாக திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையம் செயல்பட்டு வருகிறது. அகல ரயில் பாதையான இந்த ரயில் நிலையத்தில் தற்போது மின்மயமாக்கப் பணி நடைபெற்று வருகிறது.
இதையொட்டி, ரயில் நிலையத்தில் பல்வேறு பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக, மின்சார ரயில்கள் வந்து செல்லும் போது, விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், ரயில் நடைமேடை பகுதிகளிலுக்கு அருகே தடுப்புக் கட்டைகளை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதன்படி, புதன்கிழமை குப்பன்குளம் பகுதியில் தடுப்புக் கட்டைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே நிர்வாகத்துக்கு அந்தப் பகுதியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.  பின்னர், பாரதிதாசன் நகர், குப்பன்குளம், துப்புரவுத் தொழிலாளர்கள் காலனி, எத்திராஜ் நகர், சண்முகா நகர், சமாதி தோப்பு, சத்தியா நகர், வன்னியர் நகர் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தடுப்புக் கட்டை அமைக்கும் பணியைத் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து, நகர திமுக செயலர் கே.எஸ்.ராஜா தலைமையில், கடலூர் சார்- ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
குப்பன்குளத்துக்கும், திருப்பாதிரிபுலியூருக்கும் இடையில் ரயில் பாதை செல்கிறது. 
கடந்த 2009- ஆம் ஆண்டில் அகல ரயில் பாதை கொண்டு வரப்பட்டு நடைமேடை அகலப்படுத்தப்பட்டது. அப்போதே, இந்த இருபகுதிக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டது. 
குப்பன்குளம் மக்கள் நடைமேடையில் ஏறி, தண்டவாளத்தைக் கடந்தே திருப்பாதிரிபுலியூர் சென்று வந்தனர். இதைத் தொடர்ந்து, நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 200 மீட்டர் தொலைவுக்கு நடை மேம்பாலம் அமைக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. 
மேலும், பாலம் அமையும் வரையில், ரயில் நிலையத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டது. 
இந்த நிலையில், அதற்காக அமைக்கப்பட்டிருந்த வழியை அடைக்கும் செயலில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. எனவே, ஏற்கெனவே அளித்த வாக்குறுதிப்படி, நடை மேம்பாலத்தை அமைத்துத் தர வேண்டும். இல்லையெனில், அதுவரை தற்போது புழக்கத்திலுள்ள வழியில் தடுப்புகளை ஏற்படுத்தக் கூடாது என வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com