சுடச்சுட

  

  அரசுப் பள்ளி மாணவர்களின் கற்கும் திறனை சோதிக்க திடீர் தேர்வு

  By DIN  |   Published on : 05th January 2019 08:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரசுப்   பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் ஆங்கிலத் திறனை அறிந்துக் கொள்ளும் வகையில் மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் வெள்ளிக்கிழமை திடீர் தேர்வு நடத்தப்பட்டது.
  தரமான கல்வியை அளிப்பதில் மாணவர்களின் திறனை பரிசோதிப்பது முக்கிய அம்சமாகும். அதன்படி, அரசு, நகராட்சி, நலப் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவ, மாணவிகளின் ஆங்கிலத் திறனை அறிந்துக் கொள்வதற்காக தமிழக அரசு வெள்ளிக்கிழமை ஆங்கில அடைவுத்திறன் என்ற சிறப்புத் தேர்வை நடத்தியது. பள்ளி தலைமையாசிரியர் உள்பட யாருக்கும் தகவல் அளிக்காமல் வியாழக்கிழமை மாலையில் இந்தத் தேர்வை எழுதுவதற்கான கருப்பொருளை தெரிவித்தனர்.
  இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை மாவட்டத்தில் 247 பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. அதில், ஒலி எழுப்பப்பட்டு அதிலிருந்து கேள்விகள் கேட்பது, சில வார்த்தைகளை படிக்க வைத்து கேள்வி கேட்பது, பொருத்தமானவற்றை தேர்ந்தெடுத்தல், கோடிட்ட இடங்களை நிரப்புதல், படங்களுக்கு விளக்கம் அளித்தல் ஆகிய பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு மாணவர்கள் பதிலளிக்கும் வகையில் வினாக்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் (மேல்நிலை) ப.சுந்தரமூர்த்தி இந்தத் தேர்வு நடைபெற்ற வேணுகோபாலபுரம், மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார். 
  அடைவுத் திறன் தேர்வில் மாணவர்கள் எழுதிய பதில்களின் அடிப்படையில் அவர்களின் கல்வித் திறன் அறிந்துக் கொள்ளப்படும். அதற்கேற்ற வகையில் பாடத் திட்டங்களை மாற்றவும், அவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தவும் இந்த ஆய்வு முடிவுகள் பயன்படும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai