சுடச்சுட

  

  இருளர் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் வழக்கு: மனித உரிமை ஆணையத்தில்  5 போலீஸார் ஆஜர்

  By DIN  |   Published on : 05th January 2019 08:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இருளர் இன பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய வழக்கு  தொடர்பாக கடலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில மனித உரிமை   ஆணைய விசாரணையில் 5 போலீஸார் ஆஜராகினர்.
  விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள தி.மண்டபத்தைச் சேர்ந்த இருளர் இனத்தவர்களை கடந்த 2011-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருக்கோவிலூர் போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, அந்த இனத்தைச் சேர்ந்த 4 பெண்களை காவல் துறையினர் வனப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து பத்திரிகைகளில் வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. 
  இதுதொடர்பான விசாரணையில் முகாந்திரம்  இருப்பது தெரியவந்ததும், காவல்நிலைய அப்போதைய ஆய்வாளர் சீனிவாசன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமநாதன், தலைமைக் காவலர் தனசேகர், காவலர்கள் பக்தவச்சலம், கார்த்திகேயன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு மாநில மனித உரிமை ஆணையம் விசாரணைக்காக அழைப்பாணை அனுப்பியது.
  கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகள் தொடர்பாக 2 மாதங்களுக்கு ஒருமுறை கடலூரில் விசாரணை நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, வெள்ளிக்கிழமை சுற்றுலா மாளிகையில் நடைபெற்ற விசாரணையில் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் முன்னிலையில் 5 போலீஸாரும் ஆஜராகினர். ஆனால், அவர்களது வழக்குரைஞர் ஆஜராகாததால் வழக்கு விசாரணையை வேறு தேதிக்கு ஒத்தி வைக்குமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால், 2-ஆவது முறையாக இதுபோல நடைபெறுவதால் நீதிபதி காவல் துறையினரை கடுமையாக எச்சரித்து வழக்கு விசாரணையை மார்ச் 29-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
  இதேபோல, கடலூர் நகராட்சி பொறியாளராக பதவி வகித்து வரும் ஜெயப்பிரகாஷ், விழுப்புரம் மாவட்டத்தில் பணியாற்றியபோது அவரை காவல் துறையினர் தாக்கினராம். இந்த வழக்கும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்றது. கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலிருந்து 11 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதாக நீதிபதி கூறினார். பொதுமக்கள், தங்களுக்கான உரிமை மீறல்கள் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் நேரடியாக புகார் தெரிவிக்கலாம் என்றும் நீதிபதி கூறினார். வழக்கு விசாரணையின் போது நீதிபதியின் தனிச் செயலர் எம்.முத்துக்குமரன், நேர்முக உதவியாளர் சதீஷ்குமார் ஆகியோரும் உடனிருந்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai