சுடச்சுட

  

  வடலூர் தைப்பூச ஜோதி தரிசன விழாவில் கற்பூரம் விற்பனைக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
  வடலூரில் உள்ள திருஅருள்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் வருகிற  21-ஆம் தேதி  தைப்பூச ஜோதி தரிசன  விழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு விழா பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
   கூட்டத்தில் ஆட்சியர் கூறியதாவது: வடலூர் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். போக்குவரத்தை சரி செய்தல், கூடுதல் பாதுகாவலர்களை பணியில் ஈடுபடுத்துதல், அனுமதியின்றி செயல்படும் தெருவோர கடைகளை அப்புறப்படுத்துதல், கூட்ட நெரிசலின்போது பாதிக்கப்படும் நபர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 108 ஆன்புலன்ஸ் வசதி, தீத் தடுப்பு சாதனங்களுடன் தண்ணீர் நிரப்பப்பட்ட தீயணைப்பு வாகனங்கள் போதுமான தீயணைப்பு வீரர்களுடன் தயார் நிலையில் நிறுத்தி வைத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
   மேலும், குடிநீர் வசதி, தற்காலிக கழிவறைகள் அமைத்தல், நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், கூடுதலாக மின் விளக்குகள், பேருந்து வசதிகள் ஏற்படுத்துதல், தடையின்றி மின்சாரம் வழங்குதல், பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவு பொருள்களின் தரத்தை ஆய்வு செய்தல் உள்ளிட்டவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும். தைப்பூச விழாவில் கற்பூரம் விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர்.
   கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ராஜகிருபாகரன், கடலூர் சார்- ஆட்சியர் (பொ) வீ.வெற்றிவேல், விருத்தாசலம் சார்-ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ச.சந்தோஷினி சந்திரா மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai