பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் 16 பேர் குற்றவாளிகள்: கடலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் 16 பேர் குற்றவாளிகள் என கடலூர் மகளிர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் 16 பேர் குற்றவாளிகள் என கடலூர் மகளிர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
பரபரப்பான இந்த வழக்கில் இறுதி விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி டி.லிங்கேஸ்வரன் முன்னிலையில், வழக்கில் தொடர்புடைய 17 பேர் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை தனித் தனியாக கூண்டில் ஏற்றிய நீதிபதி, அவர்கள் மீதான குற்றச்சாட்டை வாசித்து குற்றம் நிரூபிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். பின்னர், குற்றங்களுக்கான தண்டனை விவரம் தனித் தனியாக வருகிற 7-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
இந்த வழக்கின் பின்னணி குறித்து மகளிர் நீதிமன்ற அரசு சிறப்பு வழக்குரைஞர் க.செல்வப்பிரியா கூறியதாவது:
கடலூர் மாவட்டம், திட்டக்குடியைச் சேர்ந்த 13 வயது பள்ளி மாணவி, 2014-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் தனது பள்ளி அருகே தின்பண்டம் தயாரித்து விற்கும் திட்டக்குடி பெரியார் நகரைச் சேர்ந்த செந்தில்குமார் மனைவி லட்சுமி என்ற தனலட்சுமியை (40) சந்தித்தார்.
அவர் சிறுமியைக் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதோடு, இந்தச் சம்பவத்தை பள்ளியிலும், சிறுமியின் உறவினர்களிடமும் தெரிவித்து விடுவதாகக் கூறி மிரட்டி அவரைத் தொடர்ந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினார். 
மேலும், நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் டவர் என்ற ஆனந்தராஜுடன் (24) பல்வேறு பகுதிகளுக்கும் சிறுமியை அனுப்பி வைத்தார்.
ஒரு கட்டத்தில், வேறொரு மாணவியை அழைத்து வந்தால் இவரை விட்டுவிடுவதாகத் தெரிவித்தனர். 
அதை நம்பிய அந்தச் சிறுமி அதே பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்த மற்றொரு மாணவியை தனலட்சுமியின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். 
அங்கு அந்த மாணவியை அறையில் அடைத்து 3 பேர் பாலியல் வன்புணர்வு செய்தனர். இதை வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டினர். 
பின்னர், தனலட்சுமி பல்வேறு காலக் கட்டங்களில் 2 சிறுமிகளையும்  விருத்தாசலம், வடலூர், பண்ருட்டி, உளுந்தூர்பேட்டை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் பாலியல் கும்பல்களிடம் விற்பனை செய்தார்.
ஒரு கட்டத்தில் இந்தக் கும்பலின் பிடியிலிருந்து தப்பிய 2 சிறுமிகளும் 5-8-2014 அன்று திட்டக்குடி காவல் நிலையத்துக்குச் சென்று நிகழ்ந்த சம்பவங்களைத் தெரிவித்தனர். 
இதையடுத்து, திட்டக்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். 
இந்த வழக்கில்  பாதிரியார், அரசியல் பிரமுகர்களும் சிக்கியதால் சமூக அமைப்பினர் போராட்டங்களை நடத்தினர். 
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர் நீதிமன்றத்தை நாடியதைத் தொடர்ந்து, இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு 4-7-2016 அன்று மாற்றப்பட்டது. சிபிசிஐடி ஆய்வாளர் தீபா இந்த வழக்கை விசாரித்தார்.
இந்த வழக்கு தொடர்பாக அரியலூர் மாவட்டம், இடையாங்குறிச்சியை சேர்ந்தவரும், வடலூரில் வசித்து வந்தவருமான சே.சதீஷ்குமார் (38), அவரது மனைவி தமிழரசி (27), விருத்தாசலம் நாச்சியார்பேட்டை ரசூல் மனைவி கலா (48), திட்டக்குடி செந்தில்குமார் மனைவி லட்சுமி என்ற தனலட்சுமி, திட்டக்குடி பெருமாள்கோவில் தெருவைச் சேர்ந்த பாதிரியார் பொ.அருள்தாஸ் (60), ஊ.மங்கலம் சண்முகம் மகன் ஸ்ரீதர் (23), விழுப்புரம் அருகேயுள்ள வளவனூரைச் சேர்ந்த சாதிக் பாட்ஷா மனைவி பாத்திமா (35), பண்ருட்டி வீட்டு வசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்த ஆறுமுகம் மகள் மகா என்ற மகாலட்சுமி (20), நெல்லிக்குப்பம் மூர்த்தி மனைவி கிரிஜா என்ற ராதா (35), விருத்தாசலம் காஜாமுதீன் மனைவி சர்மிளாபேகம் (34), வடலூர் ஆபத்தாணபுரம் அஞ்சாப்புலி மனைவி கவிதா என்ற ராஜலட்சுமி (34), சேலம் அயோத்தியாபட்டினம் வெங்கடேஷ் மகன் அன்பு என்ற அன்புச்செல்வன் (28), அவரது மனைவி அமுதா (28), திட்டக்குடி தங்கவேல் மகன் மோகன் என்ற மோகன்ராஜ் (28), செல்வம் மகன் மதிவாணன் (23), விருத்தாசலம் பி.அன்பு என்ற செல்வராஜ் (58), திருக்கண்டேஸ்வரம் ஆ.டவர் ஆனந்தராஜ், விருத்தாசலம் புதுக்குப்பம் ஜெ.பாலசுப்பிரமணி (42), பண்ருட்டி முத்துவேல் மனைவி ராதா என்ற ராதிகா (30) ஆகியோர் மீது கடத்தல், சிறுமிகள் விற்பனை, சிறுமிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
 இவர்களில், சதீஷ்குமார், அவரது மனைவி தமிழரசி ஆகியோர் வழக்கு விசாரணையின் போது தலைமறைவாகிவிட்டனர். 
பண்ருட்டி வீட்டு வசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்த மகா என்ற மகாலட்சுமியை வழக்கிலிருந்து நீதிபதி விடுவித்தார். 
மீதமுள்ள 16 பேரின் குற்றங்களும் உறுதி செய்யப்பட்டன. அவர்களுக்கான தண்டனை விவரங்கள் வருகிற திங்கள்கிழமை (ஜன.7) வெளியிடப்படும் என்றார் அவர்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிகள் காப்பகத்தில் தங்கியிருப்பதால், அவர்களுக்கு இடைக்கால நிவாரணமாக தலா ரூ.2 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com