மணல் குவாரி விவகாரம்: மாட்டுவண்டித் தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம்

மாட்டுவண்டிகளுக்கான மணல் குவாரியை மீண்டும் திறக்க வலியுறுத்தி, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

மாட்டுவண்டிகளுக்கான மணல் குவாரியை மீண்டும் திறக்க வலியுறுத்தி, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மாட்டுவண்டித் தொழிலாளர்கள் சங்கத்தினர் குடும்பத்தினருடன் காத்திருப்புப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர். 
 கடலூர்  மாவட்டத்தில் இயங்கி வந்த மாட்டு வண்டிகளுக்கான மணல் குவாரிகள் மூலம் சுமார் 5 ஆயிரம் தொழிலாளர்கள் அரசு அனுமதியுடன் மணல்  எடுத்து வந்தனர். இந்த குவாரிகள் கடந்த பல மாதங்களாக மூடப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் வேலை இழந்தனர். இதனால் அவர்களது குடும்பம் வாழ்வாதாரத்தை இழந்ததுடன், மாடுகளுக்கும் தீவனம் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மீண்டும் மணல் குவாரிகளை திறந்து மாட்டுவண்டித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அரசு பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்களை   சங்கத்தினர் நடத்தி வருகின்றனர். எனினும், மாவட்ட நிர்வாகம் இந்தப் பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம்.   இந்த நிலையில், மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து குடும்பத்துடன் காத்திருக்கும் போராட்டம் நடத்தப்படும் என சிஐடியூ மாட்டுவண்டித் தொழிலாளர்கள் சங்கத்தினர் அறிவித்தனர். அதன்படி, வெள்ளிக்கிழமை சிஐடியூ மாநில உதவி பொதுச் செயலர் வி.குமார் தலைமையில் மாட்டுவண்டித் தொழிலாளர்கள் திரளானோர் தங்களது குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் அமர்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 சங்கத்தின் மாவட்டச் செயலர் வி.திருமுருகன், மாவட்ட தலைவர் ஆர்.வி.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியூ மாவட்டச் செயலர் பி.கருப்பையன், தலைவர் ஜி.பாஸ்கரன், நிர்வாகி வி.சுப்புராயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர், ஆட்சியர் அலுவலகத்தில் சார்-ஆட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் காவல் துறை, வருவாய்த் துறை, பொதுப் பணித் துறையினர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தை முடிவில், திருக்கண்டேஸ்வரம், இளமங்களம், ஆயிப்பேட்டை, மணவாளநல்லூர் ஆகிய 4 குவாரிகளை வருகிற 7-ஆம் தேதி முதல் இயக்குவது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com