சுடச்சுட

  


  ஆஞ்சநேயர் கோயில்களில் அனுமன் ஜயந்தி விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
  மார்கழி மாதத்தில் அமாவாசையும், மூலநட்சத்திரமும் கூடி வரும் நாளில் அனுமன் ஜயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, கடலூர் மாவட்டம் முழுவதும் அனுமனுக்கு தனி கோயில், தனி சந்நிதி உள்ள கோயில்கள் மற்றும் வைணவத் திருத்தலங்களில் இந்த விழா சனிக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
  திருப்பாதிரிபுலியூரில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள வரதராஜப் பெருமாள் கோயிலில் காலையில் சீதா, லஷ்மண, ஆஞ்சநேய சமேத கோதண்டராமருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. மாலையில் ஆஞ்சநேயருக்கு 10,008 வடமாலை சாத்தி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில், செயல் அலுவலர் ப.முத்துலட்சுமி, தக்கார் கு.சுபத்ரா, எழுத்தர் வி.ஆழ்வார், ஸ்ரீமத் மணவாள மாமுனிகள் கைங்கர்ய சபாவினர் பங்கேற்றனர்.
  இதேபோல, செம்மண்டலத்தில் உள்ள 26 அடி உயர ஆஞ்சநேயருக்கு காலையில் பால் அபிஷேகமும், திருமஞ்சனமும் நடத்தப்பட்டது. மாலையில் 1,008 வடமாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 
  நெல்லிக்குப்பம் அருகே எஸ்.குமாரபுரத்தில் உள்ள 41 அடி உயர காரியசித்தி ஆஞ்சநேயருக்கு பால் அபிஷேகம், சிறப்பு அலங்காரத்துடன் வடமாலை சாத்தப்பட்டது. இதேபோல திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் உள்பட அனைத்து ஆஞ்சநேயர் திருத் தலங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
  திட்டக்குடி: திட்டக்குடியில் தேரடி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் பட்டாச்சாரியார் பாலாஜி வரதாச்சாரியார் தலைமையில் சிறப்பு திருமஞ்சனமும், 1008 ஸ்ஹஸ்ர நாமாவளி, அலங்காரம், வெண்ணெய் மற்றும் வடமாலை சாத்தப்பட்டு சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது. ஆஞ்சநேய பக்தர்கள் குழுவினர் ஸ்ரீராம கீர்த்தனம் வாசித்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் பரம்பரை தர்மகர்த்தா ராஜேந்திரன் செய்திருந்தார். விழாவையொட்டி பக்தர்கள் விரதமிருந்து ஆஞ்சநேயருக்கு வடமாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை சாத்தியும், வெண்ணெய் காப்பு அலங்காரமும் செய்து வழிபாடு நடத்தினர்.
  சிதம்பரம்: இதேபோல, அனுமன் ஜயந்தி விழாவையொட்டி, சிதம்பரம் கீழரத வீதியில் உள்ள வீரசக்தி ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், சுமார் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் ஸ்ரீவீரசக்தி ஆஞ்சநேயர் வீதிஉலா வந்தார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு எஸ்சி, எஸ்டி நிதி கமிட்டி உறுப்பினர் தில்லை சீனு உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். 
  இதேபோல, சிதம்பரம் மேலரத வீதியில் உள்ள ஸ்ரீகோதண்டராமர் கோயில், நடராஜர் கோயிலில் உள்ள தில்லைகோவிந்தராஜப் பெருமாள் கோயில்களிலும் அனுமன் ஜயந்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
  பண்ருட்டி: பண்ருட்டி, திருவதிகை சரநாராயணப் பெருமாள் கோயிலில் அனுமன் ஜயந்தியை முன்னிட்டு கோயில் வளாகத்தில் உள்ள அனுமன், ராமபக்த ஆஞ்சநேயராக சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். இதேபோல, திருவதிகை கெடிலம் நதிக் கரையில் உள்ள வீர ஆஞ்சநேயர் வெண்ணைக் காப்பு அலக்காரத்தில் காட்சியளித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai