இயற்கை வழி பூச்சி மேலாண்மை: வேளாண் துறை ஆலோசனை

இயற்கை வழியில் பூச்சிக் கட்டுப்பாடு மேலாண்மை செய்வது குறித்து வேளாண் துறை ஆலோசனை வழங்கியுள்ளது. 


இயற்கை வழியில் பூச்சிக் கட்டுப்பாடு மேலாண்மை செய்வது குறித்து வேளாண் துறை ஆலோசனை வழங்கியுள்ளது. 
இதுகுறித்து குறிஞ்சிப்பாடி வேளாண்மை உதவி இயக்குநர் ப.சின்னக்கண்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ரசாயன மருந்தைப் பயன்படுத்தி பூச்சிக் கட்டுப்பாடு என்ற வழக்கமான செயலுக்கு மாறாக, இயற்கை சார்ந்த பொருள்களை உபயோகித்தும், இனக் கவர்ச்சிப் பொறி, விளக்குப் பொறி மற்றும் மஞ்சள் ஒட்டுப் பொறிகளைப் பயன்படுத்தியும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
இனக் கவர்ச்சிப் பொறியானது பெண் பூச்சிகள் சுரக்கும் இனக் கவர்ச்சி வாசத்தால், ஆண் பூச்சிகளை கவர்ந்து இழுத்து அழிக்கும் முறையாகும். இந்த வகையில் பெண் அந்துப் பூச்சி சுரக்கும் திரவத்தை செயற்கை முறையில் தயார் செய்து, அதை சிமிழ் போன்ற சிறிய குப்பியில் அடைத்து மாலை வேளைகளில் திறந்து வைக்க வேண்டும். 
இதிலிருந்து வரும் வாசனையால் குறிப்பிட்ட வகை ஆண் அந்துப் பூச்சிகள் கவர்ந்திழுக்கப்பட்டு, சிறிய குப்பியுடன் இணைக்கப்பட்டுள்ள நீளமான பைகளில் சேகரிக்கப்படும். பின்னர் இந்தப் பூச்சிகளை எரித்து அழிக்கலாம். தாய் அந்துப் பூச்சிகளை அழிப்பதன் மூலம் ஆயிரக்கணக்கில் முட்டைகள், புழுக்கள் உற்பத்தியாவது தவிர்க்கப்படுவதால் பூச்சித் தாக்குதல் வெகுவாகக் குறையும். எனவே, மணிலா, பயறு வகைகள், நெல் போன்ற பயிர்களில் சேதம் விளைவிக்கும் அந்துப பூச்சிகளை இனக் கவர்ச்சிப் பொறி மூலம் கட்டுப்படுத்தி அதிக மகசூல் பெறலாம் என அதில் 
குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com